பைக்காரா அணையில் உபரி நீர் வெளியேற்றம்  
தமிழகம்

நீலகிரியில் குறைந்தது கனமழை: மக்கள் நிம்மதி; பைக்காரா அணையில் உபரி நீர் வெளியேற்றம் 

ஆர்.டி.சிவசங்கர்

உதகை

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வந்த கனமழையின் தீவிரம் குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அவற்றிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்தாண்டு பருவமழை பொய்த்த காரணத்தினால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருந்தது.

இந்நிலையில், இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை போதுமான அளவு பெய்யாத பட்சத்திலும், கடந்த 10 நாட்களாக பருவமழை தீவிரமாகி, கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. கனமழையால் மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா தாலுக்காக்களை மழை புரட்டி போட்டது.

எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்தனர். தமிழக வரலாற்றில் முதன்முறையாக அவலாஞ்சியில் அதீத மழை பெய்தது. நேற்று 91 செ.மீ., மற்றும் இன்று காலை நிலவரப்படி அங்கு 45 செ.மீட்டர் மழை பெய்தது.

இதனால், அப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவலாஞ்சியில் சிக்கியிருந்தவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மீட்புப்பணிகளுக்கு விமானப்படை ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. குந்தா, கெத்தை, பில்லூர் அணைகளிலிருந்து கடந்த நான்கு நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணி

இந்நிலையில், பைக்காரா அணை முழு கொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி இன்று (சனிக்கிழமை) காலை முதல் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், பைக்காரா ஆற்றின் படுகையில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆறுகளில் வெள்ளம்

கூடலூர், பந்தலூர், தேவாலா, ஓவேலி பகுதிகளை மையமாகக் கொண்டுள்ள நீர்நிலைகளான பாண்டியாறு, புத்தூர்வயல் ஆறு, தேவாலா மலைத்தொடரில் உருவாகும் பொன்னாணி ஆறு மற்றும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப்பகுதியில் பாயும் மாயாறில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக பெய்த க மழையின் தீவிரம் குறைந்து இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருவதால், மீ்ட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மழை குறைந்து வெள்ளம் வடிந்த பின்னரே சேதங்கள் குறித்து முழு விவரங்கள் தெரிய வரும் என வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்தார்.

மழையளவு (மில்லிமீட்டரில்)

இன்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 450 மி.மீ., பதிவானது. உதகை 41.6, நடுவட்டம் 148, கல்லட்டி 49, கிளன்மார்கன் 97, குந்தா 34, அவலாஞ்சி 450, அப்பர் பவானி 189, எமரால்டு 99, கெத்தை 16, கிண்ணக்கொரை 27, குன்னூர் 26, பர்லியாறு 22, கேத்தி 29, கோத்தகிரி 12, கோடநாடு 28, கூடலூர் 126, தேவாலா 159 மி.மீட்டர் மழை பதிவானது.

SCROLL FOR NEXT