வேலூர்
வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பதிவு பெற்ற அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் என 26 பேர் குறைந்த வாக்குகளைப் பெற்று டெபாசிட் தொகையை இழந்தனர்.
டெபாசிட் இழந்த வேட்பாளர்கள்
வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட 28 பேர் போட்டியிட்டனர். இதில், இரண்டாமிடத்தைப் பிடித்த அதிமுக வேட்பாளரைத் தவிர மற்ற 26 வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்தனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முதல் சுற்றில் இருந்து ஆறாவது சுற்றுவரை முன்னணியில் இருந்தார்.
அதன் பிறகு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், கடைசி சுற்றுவரை முன்னணியில் இருந்து வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் மையத்துக்கும் நேரில் சென்று பார்வையிட்டார். முதல் 6 சுற்றுகள் பின்தங்கியதால் வாணியம்பாடி தொகுதிக்கு உட்பட்ட வாக்குகள் எண்ணப்பட்ட கட்டிடத்தின் அருகில் அமர்ந்துவிட்டார். 10-வது சுற்றுக்குப் பிறகே அவர் அருகில் அமர்ந்திருந்தவர்களுடன் சகஜமாக பேசத் தொடங்கினார்.
நோட்டாவுக்கு நான்காமிடம்
வேலூர் தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி, 26,995 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தை பெற்றார். 9,417 வாக்குகளுடன் நோட்டா நான்காமிடத்தைப் பிடித்தது.
தபால் வாக்குகள்
காவல்துறையைச் சேர்ந்தவர் கள் வாக்களிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதில், 673 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 78 வாக்குகள் செல்லா தவை. கதிர்ஆனந்துக்கு 200, ஏ.சி.சண்முகத்துக்கு 363 வாக்குகள், நோட்டாவுக்கு 5 வாக்குகள் கிடைத்தன.
அதேபோல், ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் வாக்களிக்க வசதியாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு எலெக்ட்ரானிக் தபால் வாக்குச்சீட்டுகள் அந்தந்த ராணுவ மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2,385 தபால் வாக்குகள் பெறப்பட்டதில், 1,967 வாக்குகள் செல்லாதவையாக இருந்தது. இதில், கதிர்ஆனந்துக்கு 160 வாக்குகள், ஏ.சி.சண்முகத்துக்கு 146, நோட்டாவுக்கு 14 வாக்குகள் கிடைத்தன.
கவனத்தை ஈர்த்த வேட்பாளர்
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லபாண்டியன் வேலூர் மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு பாட்டில் சின்னம் ஒதுக்கப்பட்டது. முதல் நாள் பிரச்சாரத்தின்போதே தனது இரு சக்கர வாகனத்தில் பாட்டில் படத்துடன் சடலத்தைப்போல் வேடமணிந்து வந்து வாக்கு சேகரித்தார்.
நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தனது முகநூல் பக்கத்தில் ‘திமுக, அதிமுக இரண்டில் ஒன்று வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், பாட்டில் சின்னத்தில் ஆயிரம் ஓட்டுகள் வாங்கியாச்சுன்னா, அடுத்து நம்ம பசங்கதாண்டா, தமிழக கட்சிகளுக்கெல்லாம் எதிர்க்கட்சி, எழுதிவெச்சிக்கோ’ என குறிப்பிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்தபடியே ஆயிரம் வாக்குகளை கடந்து 2,591 வாக்குகள் பெற்று எட்டாமிடம் பிடித்தார்.