விழுப்புரம்
திண்டிவனம் அருகே சிங்கனூர் கிராமத்தை சேர்ந்த தெய்வமணி - செல்வி தம்பதியரின் மகன் அலெக்ஸாண்டர் (30). மயிலம் அடுத்த கொண மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் - அன்னபூரணி தம்பதியரின் மகள் ஜெகதீஸ்வரி (26). இருவரும் மயிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.
இரு வீட்டார் சம்மதத்துடன் வருகிற 2-ம் தேதி மயிலம் முருகன் கோயிலில் திருமணமும் அன்று மாலை திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பும் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
திருமண அழைப்பிதழ் அச்சிடுவதற்கான மாதிரியை நேற்று முன்தினம் அலெக்ஸாண்டர் தன் தந்தையிடம் காட்டி, அடிக்க கொடுத்துள்ளார். திருமண வேலைகள் அனைத்தும் ஏற்பாடு செய்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அலெக்ஸாண்டரின் தந்தை தெய்வமணி நேற்று காலை உயிரிழந்தார். திருமணம் நடக்க இருந்த நிலையில் நடந்த இந்த துயரச் சம்பவத்தால் அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
'தந்தையின் ஆசீர்வாதத்துடன் தன் திருமணம் நடக்காதே!' என்ற ஏக்கம் அலெக்ஸாண்டருக்கு அதிகரித்தது. இதனால் உறவினர்களை அழைத்த அவர், "எனது தந்தை இறந்தாலும். அவரது சடலத்தின் முன்னாடி என் திருமணம் நடக்க வேண்டும். அவரது ஆசீர்வாதம் வேண்டும்'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து உறவினர்கள் கொண மங்கலத்தில் உள்ள ஜெகதீஸ்வரி மற்றும் அவரது பெற்றோரிடம் நடந்ததை எடுத்துக்கூறி திருமணத்திற்கு சம்மதம் பெற்றனர்.
பிறகு சிங்கனூரிலுள்ள அலெக்ஸாண்டரின் இல்லத்தில் தெய்வ மணி சடலத்தின் முன்னால் அவரது கையில் தாலியை வைத்து ஆசீர்வாதம் பெற்று, அலெக்ஸாண்டர் ஜெகதீஸ்வரி கழுத்தில் தாலி கட்டினார்.
தாலி கட்டும்போது அலெக்ஸாண்டர் குமுறி அழுதது, அங்கு கூடியிருந்த உறவினர்கள் மற்றும் பொது மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. அவரை அவர்கள் ஆசுவாசப்படுத்தி, ஆசீர்வாதம் செய்தனர். பின்னர் அவரது தந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தந்தை இறந்த பிறகும் அவரது ஆசீர்வாதத்துடன் சடலத்தின் முன்னால் திருமணம் நடந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.