தொடர் கனமழைக்கு மூணாறின் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் தேனி, உடுமலை, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக இடுக்கி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மூணாறு உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கியிருப்பதுடன் வெள்ளநீர் அரிப்பினால் சாலைகளும் வெகுவாய் சிதிலமடைந்தன.
குறிப்பாக நல்லதண்ணிசாலை, கன்னிமலை, காலனி சாலை போன்ற பல பகுதிகளிலும் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளன.
பல பகுதிகளிலும் இருந்து வரும் நீர் முதிரைபுழை ஆற்றில் நீரோட்டத்தை அதிகரித்துள்ளது. எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பெய்த மழையினால் பெரியவாரை பாலம் துண்டிக்கப்பட்டது. எனவே ராட்சத குழாய்களை வைத்து தற்காலிக பாலம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதே போல் ஆத்துக்காடு, சின்னக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட லாக்ரோடு பகுதிகளிலும் மண்சரிவு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மூணாறைச் சுற்றியுள்ள இதே நிலை உள்ளதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
எனவே இன்று (வெள்ளிக்கிழமை) தேனியில் இருந்து மூணாறு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அதே போல் மூணாறில் இருந்து தேனி வரும் கேரளஅரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை. உடுமலைப்பேட்டை, மறையூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பல சாலைகள் சேதமடைந்து கிடப்பதால் அங்கும் போக்குவரத்து முடங்கி மூணாறு தனித்தீவாக மாறி விட்டது.
பல மணிநேரம் மின்சாரம் இல்லாததுடன், இணையதள தொடர்பிலும் சிரமம் நிலவிவருகிறது. கடைகளும் குறைவான அளவிலே திறக்கப்பட்டுள்ளன.
அசாதாரண நிலை நிலவுவதால் பொதுமக்கள் பலரும் வெளியில் வருவதை தவிர்த்துள்ளனர். இதனால் மூணாறு மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் ஆள்நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நேற்று 240 மிமீட்டர் மழைப்பொழிவினால் மூணாறின் இயல்புநிலை வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது. எங்குபார்த்தாலும் நீர்தேக்கமும், வெள்ளநீர் ஓட்டமும் அதிகம் இருப்பதால் பலரும் வெளியே செல்லவில்லை. தற்போது மழை குறைந்தாலும் இரவில் மீண்டும் தொடர வாய்ப்புள்ளது என்றனர்.