உதகை
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று பதிவான 82 செ.மீ., மழைதான் தமிழகத்தில் அதிகபட்சமாக பதிவான மழையளவு என்று கூறப்பட்ட நிலையில், இன்று காலை வரை, கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 91 செ.மீ., மழை பதிவாகி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை சரி வரப் பெய்யாத நிலையில், கடந்த ஒருவார காலமாக பருவ மழை தீவிரமடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை, ஒரு வார காலமாக இடைவிடாமல் இரவு, பகலாகத் தொடர்ந்து பெய்து வருகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரியில் அதிக அளவு மழை பதிவானது.
தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில்தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவரது முகநூல் பதிவில், ''தென்னிந்தியாவில் அவலாஞ்சியில்தான் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் அங்கு அதி கனமழை பெய்து வருகிறது. இந்த வாரயிறுதி வரை அங்கு மழை பெய்யும். நீலகிரியில் 2304 மி.மீ., தமிழகத்தில் 76 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச மழை பதிவு'' என தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை மைய அதிகாரிகள் அவலாஞ்சியில் 82 செ.மீ. மழைப் பதிவை சந்தேகத்தோடு பார்க்கும் வேளையில், இன்று காலை வரையிலான 24 மணிநேரத்தில், அங்கு 91 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் அதீத மழைப் பொழிவு ஏற்பட்டு வருகிறது என மத்திய மண் மற்றும் நீர் வளப்பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி எஸ்.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும் போது,''இந்திய மண் மற்றும் நீர்வள மைய ஆய்வின்படி நீலகிரி மாவட்டத்தின் சராசரி மழையளவு 1,324 மி.மீட்டராகும். தென்மேற்குப் பருவ மழை தற்போது தீவிரமாகி 9 நாட்களில் சராசரியாக 450 மி.மீ., மழை பதிவானது. இன்னும் ஓரிரு நாட்கள் வரை தென்மேற்குப் பருவமழை நீடிக்கும் என்பதால் மழை அளவு அதிகரிக்கும். காலநிலை மாற்றத்தால் அதீத மழை பொழிகிறது. பருவமழை காலங்களில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால், மழை பெய்யும் நாட்கள் குறைந்து விட்டன. குறைவான நாட்களில் அதிக மழை பெய்து சராசரியைப் பூர்த்தி செய்து விடுகிறது. குறைந்த நாட்களே மழை பெய்யும் பட்சத்தில், மழைநீரைச் சேமித்தால்தான் குடிநீர் மற்றும் வேளாண் தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்கும்'' என்றார்.
2009-ம் ஆண்டு பீதியில் மக்கள்
இரவு பகலாக பெய்துவரும் கனமழை காரணமாக மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3 நாட்கள் பெய்த மழை, மாவட்டத்தையே புரட்டிப் போட்டது. 43 உயிர்கள் பலியாகின. சாலைகள் துண்டிக்கப்பட்டு பிற மாவட்டங்களிலிருந்து துண்டிக்கப்பட்டு தீவு போல் காட்சியளித்தது.
அப்போது 3 நாட்களில் மழை ஓய்ந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மழை தொடர்ந்து பெய்து அதே பீதியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இம்முறை சற்று அதிகமாகவே. ஏனென்றால் மழை இது வரை ஓயவில்லை, தொடர்கிறது.