தமிழகம்

திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக மழை: அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு

செய்திப்பிரிவு

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது.

கடந்த சில நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. திருப்பூர், பல்லடம், அவிநாசி பகுதிகளில் பகல் நேரங்களில் மழை பெய்ததால், பள்ளி சென்ற குழந்தைகள், வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகினர். பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பஞ்சலிங்க அருவிக்கு செல்லாமல் இருக்க வனத்துறை மற்றும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, விநாடிக்கு 7236 கன அடி தண்ணீர் அணைக்கு வந்தடைந்தது. இதனால், ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்தது. திருப்பூர் மாநகர் வடக்கு வட்டத்துக்கு உட்பட்ட அணைப்பாளையம், பூளவாடி சுகுமார் நகர் பகுதிகளில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, வருவாய்த் துறையினர் வெள்ள அபாயம் விடுத்து பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினர்.

திருப்பூர் தெற்கு வட்டத்தில் சங்கிலிப்பள்ளம், ஜம்மனை ஓடை ஆகிய பகுதிகளையும் வருவாய்த் துறையினர் கண்காணித்து வருகின்றனர். கொங்கு பிரதான சாலையிலுள்ள பழமையான வேப்ப மரம் காற்றுக்கு சாய்ந்தது. வடக்கு தீயணைப்புத் துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT