தமிழகம்

கொடைக்கானலில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத மழை; ஏமாற்றத்தில் மக்கள்: தொடரும் சாரல் மழையால் சுற்றுலா பாதிப்பு

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்துவருவதால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லாத நிலையே காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

கொடைக்கானலுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக கொடைக்கானல் நகரில் 30.5 மில்லிமீட்டர், போட் க் கிளப் பகுதியில் 30.0 மி.மீட்டர், பழநியில் 25.5 மி.மீட்டர், ஒட்டன்சத்திரத்தில் 15.2 மில்லி மீட்டர் என்றளவில் மழை பெய்துள்ளது.

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ஒட்டுமொத்தமாக 161.3 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.

எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாத மழை:

கொடைக்கானலில் கடந்த இரு தினங்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் போதிய மழை பொழிவு இல்லாத நிலையே உள்ளது. கேரளாவில் பெய்யும் மழையின் தாக்கமாகவே கொடைக்கானலில் மழைப் பொழிவு காணப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையில் விவசாயிகளும், மக்களும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரும் அளவிற்கு பலத்த மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தென்மேற்கு பருவமழை முடியும் தருவாயில் கூட கொடைக்கானல் மக்களுக்கு மழை ஏமாற்றத்தையே தந்துவருகிறது.

பலத்த மழை பெய்யாததால் வனப்பகுதி ஓடைகளில் தண்ணீர் குறைந்த அளவே செல்கிறது. இவையும் மலையடிவாரத்தில் உள்ள அணைகளுக்கு சென்றடைவதற்குள் வறண்டுவிடும் நிலையே உள்ளது.

அதே நேரத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பகலில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்துவருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளும் வரத்தும் குறைவாக உள்ளது.

வெப்பநிலையைப் பொறுத்தவரை பகலில் 15 டிகிரி செல்சியசாகவும், இரவில் 13 டிகிரி செல்சியசாகவும் வெப்பநிலை காணப்பட்டது. இரவில் லேசான குளிர் நிலவியது.

SCROLL FOR NEXT