மதுரை
இந்தியாவில் சட்டப்படியான கருக்கலைப்புக்கான காலம் 20 வாரம் என்றிருப்பதை 24 வாரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட முன்வரைவு மத்திய சட்டத் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இளம் பெண்கள், சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும்போது, அந்தக் கருவை சட்டப்படி கலைப்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.
இதுதொடர்பாக உயர் நீதி மன்றக் கிளை பதிவாளர் தாக்கல் செய்த மனுவில், பாலியல் வன் முறைகளால் கர்ப்பமாகும் இளம் பெண்கள், சிறுமிகள் வயிற்றில் வளரும் கரு 20 வாரத்துக்குள் இருந்தால் சட்டப்படி அந்தக் கருவை கலைக்க அனுமதி வழங்கப் படுகிறது. 20 வாரம் தாண்டிய கருவைக் கலைக்க நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டி உள்ளது.
இந்தியாவில் 2012-ம் ஆண்டில் 24,923 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், 2016-ல் 38,947 பாலியல் வன்கொடுமை சம்பவங் களும் நடந்துள்ளன. இதனால் கருக்கலைப்புக்கான காலத்தை 20 வாரங்களில் இருந்து 24 வாரங் களாக உயர்த்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் சத்ய நாராயணன், புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அமைச்சரவை ஒப்புதல்
அப்போது மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கருக்கலைப்புக்கான காலத்தை 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்துவது தொடர்பாக அமைச் சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டு மத்திய சட்டத் துறை யின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. ஒப்புதலுக்குப் பிறகு சட்டத்திருத்தம் கொண்டுவரப் படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையேற்று இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி களின் முன்பு விசாரணைக்குப் பட்டியலிட பதிவாளருக்கு நீதிபதி கள் உத்தரவிட்டனர்.