தமிழகம்

ராஜபக்‌சே வருகையை எதிர்த்து 8 அமைப்புகள் போராட்டம்

செய்திப்பிரிவு

நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ராஜபக்‌சே பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரி வித்து சென்னையில் 8 அமைப்புகள் சார்பில் திங்கள் கிழமை கண்டனப் போராட்டங்கள் நடந்தன.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில், பொருளாளர் மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது ராஜபக்சேவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், சென்னை காயிதே மில்லத் மணி மண்டபம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆம் ஆத்மி கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஜெயராம், ஜே.பிரபாகர் மற்றும் வசீகரன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ராஜபட்சே அரசு, தமிழர்களை படுகொலை செய்தது குறித்து உலகளாவிய விசாரணை நடத்த வேண்டுமென்று உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், விசாரணைக்கு உட்படுத்த வேண்டியவரை, மத்திய பாஜக அரசு விருந்தினராக அழைப்பது கண்டனத்துக்குரியது என்று ஆம் ஆத்மி கட்சியின் கமிட்டி உறுப்பினர் ஜெயராம் தெரிவித்தார்.

இதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் பங்கேற்று பேசும்போது, ‘இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டனர். ராஜபட்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டிய நிலையில், அவரை அரசு மரியாதையுடன் பாஜக வரவேற்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது’ என்றார்.

மத்திய அரசு அலுவலகங்கள் இருக்கும் சாஸ்திரி பவன் முன்பு, பாலச்சந்திரன் மாணவர்கள் இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் தலைமையிலும், அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தினர் மாநிலச் செயலாளர் திருமலை தலைமையிலும் அனுமதி மீறி போராட்டம் நடத்தினர்.

அப்போது இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலாளர் திருமலை பேசும்போது, ’இலங்கை அதிபர் ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை வாங்கித் தர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அவரை அரசு மரியாதையுடன் வரவேற்பது கடும் கண்டனத்துக்குரியது’ என்றார். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் 7 சிறுவர்கள் உள்பட 55 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இதேபோல் புரட்சிகர மாணவர் முன்னணியினர் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் வள்ளுவர் கோட்டம் முன்பு போராட்டம் நடத்தினர்.

மேலும், தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பழ.நெடுமாறன் தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்துப் போராட்டங்களிலும், கருப்புக் கொடியேந்தியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

SCROLL FOR NEXT