தமிழகம்

அசோகரின் கல்வெட்டில் தமிழ் மன்னர்கள்!

செய்திப்பிரிவு

சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டவர் அசோகர்’ என்று பள்ளியில் படித்திருக்கிறோம். இதைத் தாண்டி, அவர் பெரும் சக்கரவர்த்தி என்றும், கலிங்கப்போரின் விளைவால் அவர் கண்ட மரணக் காட்சிகள் அவரது மனதை மாற்றியமைத்து, புத்தரின் அற வழியில் செல்லத் தூண்டியது என்றும் அறிந்துள்ளோம்.

“தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் மரங்களை நடவேண்டும் என்று ஆணை பிறப்பித்த அசோகர், இந்த உத்தரவை பெரும் பாறைகளில் வெட்டிவைத்தார். மொத்தம் 6 இடங்களில் வெட்டப்பட்ட கல்வெட்டில்தான், தமிழ் மன்னர்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது” என்கிறார் கோவையைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் துரை.சுந்தரம். அவரிடம் பேசினோம்.

“குஜராத் மாநிலம் கத்தியவார் பகுதியில் உள்ள கிர்னார் என்ற ஊரில், ஒரு பெரிய பாறையில் அசோகரின் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2-வது கல்வெட்டில்தான் மரம் நடுதலுக்கான ஆணை பொறிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஷாபாஜ்கடி, கால்சி, தவுலி, ஜவுகதா பகுதிகளில் உள்ள கல்வெட்டுகளிலும் இந்த உத்தரவு பொறிக்கப்பட்டுள்ளது. பிராகிருத மொழியிலும், பிராமி எழுத்துகளிலும் இந்தக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

மனிதர்கள், விலங்குகளுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக ஆதுல சாலைகள் (மருத்துவமனைகள்) அமைப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்துச் செடிகள் (மூலிகைச் செடிகள்), வேர்கள், பழ மரங்கள் ஆகியவற்றைக் கொண்டு மருத்துவ உதவி அளிக்கவும், அவற்றைத் தேவையான இடங்களில் இருந்து வரவழைக்கவும், பயிரிடவும், சாலைகளில் மனிதர்கள், விலங்குகளுக்கு பயன்தரும் மரங்கள் நட வேண்டுமென்றும், கிணறுகள் தோண்ட வேண்டுமென்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அசோகர் வென்ற நாடுகளில் எல்லாம் இதுபோன்ற மருத்துவ உதவிகள் செய்யப்பட வேண்டுமென்று விளக்கும் இந்தக் கல்வெட்டு, வேறு சில நாட்டுப் பகுதிகளிலும் இந்த மருத்துவ அமைப்பு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கிறது. இந்த வகையில், சங்ககாலத் தமிழ் மன்னர்களின் பெயர்கள், இலங்கையின் நாட்டுப் பெயர், யவன அரசன் அந்தியாகோவின் பெயர் ஆகியவை கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. சோடா, பாண்டா, சதிய புத, கேதல புத ஆகிய பெயர்கள் கல்வெட்டில் உள்ளன.

இந்தக் கல்வெட்டை பிரின்செப், வில்சன் ஆகிய மேலைநாட்டு அறிஞர்கள் இருவர் படித்துப் பொருள் அறிந்துள்ளனர். பிரின்செப் என்வர், அசோகரின் அரசாணை , அவர் வென்ற நாடுகள் மற்றும் அவரது நம்பிக்கைக்குரிய அரசர்களின் ஆட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டதாக குறிப்பிடுகிறார்.

நம்பிக்கைக்குரிய அரசர் பட்டியலில், சோடா, பாண்டா, சதிய புத, கேதல புத மற்றும் தாம்பபனி என்னும் இலங்கை உள்ளதாகவும், ஆண்ட்டியோக்கஸ் என்ற கிரேக்க அரசரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
இந்தப் பெயர்கள், சோழா, பாண்டியா, சதியபுத்ர, கேதலபுத்ர ஆகிய அரசர்களைக் குறிப்பிடுவதாகவும், இவர்கள் அசோகரின் ஆட்சி எல்லையில் அமைந்த நாடுகளின் தலைவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். சோழா, பாண்டியா ஆகியவை தமிழ் மன்னர்களின் பெயர்கள் என்றும், சதியபுத என்பது அதியமான் என்ற குறுநில மன்னரைக் குறிக்கும் என்றும் அறியலாம்.

தனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டுப் பரப்பு மட்டுமின்றி, தனது எல்லையில் இருக்கும் தமிழரசர் நாட்டிலும், மருத்துவம் சார்ந்த பணிகள் நடக்க வேண்டும் என்று அசோகர் விரும்பியுள்ளார் என்று இதன் மூலம் அறியலாம். எனினும், அவர் தமிழ் அரசர்களுடன் கொண்டிருந்த பிணைப்பு தொடர்பான சான்றுகள் எதுவும் கிடைத்ததா என்பது தெரியவில்லை” என்றார் துரை.சுந்தரம்.

SCROLL FOR NEXT