சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் கோவை மாவட்டம் கல்லார் பகுதியில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி வெற்றி பெற்றது.
சிபிஎஸ்இ பள்ளிகள் கூட்டமைப்பான சகோதயா அமைப்பு சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வாலிபால் போட்டி நடைபெற்றது.
இதில், கோவை மண்டலத்தில் உள்ள 9 சிபிஎஸ்இ பள்ளி அணிகள் கலந்துகொண்டன. இறுதிப் போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி, திருச்செங்கோடு எஸ்.எஸ்.எம். சென்ட்ரல் பள்ளியின் மாணவிகள் அணிகள் மோதின. இதில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மாணவிகள் அணி 22-25, 25-15, 25-17 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
இதேபோல, மாணவர்கள் பிரிவிலும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி, 25-21, 25-21 என்ற புள்ளிக் கணக்கில் திருச்செங்கோடு எஸ்.எஸ்.எம். சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் அணியை வென்றது. வெற்றி பெற்ற சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவ, மாணவிகளை, பள்ளியின் நிர்வாக அறங்காவலர் கே.ராமசாமி, செயலர் கவிஞர் கவிதாசன், கல்வி ஆலோசகர் வெ.கணேசன், முதல்வர் இரா.உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சு.சக்திவேல், உடற்கல்வி இயக்குநர் ஜெரார்டு மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.