இடிந்து விழுந்த கட்டிடம், படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

கோவை ரயில் நிலைய வளாகத்தில் கட்டிடம் இடிந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு

டி.ஜி.ரகுபதி

கோவை

கோவை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பார்சல் பிரிவு கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

கோவை ரயில் நிலைய வளாகத்தின் பின்புறம், கூட்ஷெட் சாலை நுழைவாயில் அருகே ரயில்வே பார்சல் பிரிவு அலுவலகம் உள்ளது. இங்கு இருசக்கர வாகனம் பார்சல் செய்யும் இடம் மற்றும் பொருட்கள் வைக்கும் இடம் உள்ளன. கோவையில் மழை பெய்து வருகிறது.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் பலத்த மழையின் காரணமாக ரயில்வே துறைக்கு சொந்தமான இந்த அலுவலக கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஊழியர்கள் சிலர் அதில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையம், ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படை அலுவலர்கள், ரயில்வே துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்துக்குள்ளே சிக்கியிருந்த ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த 50- க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

சில மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் இடிபாடுகளில் சிக்கிய ஒப்பந்த பணியாளர்கள் பவழமணி, இப்ராகிம் மற்றும் வடமாநில தொழிலாளி ஒருவர் என மூன்று பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் பவழமணி, இப்ராகிம் ஆகியோர் உயிரிழந்தனர். வடமாநில தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT