உதகை
நீலகிரி மாவட்டத்தில் 6 நாட்களாகத் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சியில் அதிகபட்சமாக 820 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் இரவு, பகலாக கன மழை பெய்து வருகிறது.
கன மழை காரணமாக மூன்று நாட்களாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்வதால், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 820 மி.மீட்டரும், அப்பர் பவானியில் 300 மி.மீட்டர் மழையும் பதிவானது.
அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால், உதகை மற்றும் குன்னூர் நகரங்களுக்கான குடிநீர் விநியோகம் செய்யும் பார்சன்ஸ் வேலி மற்றும் ரேலியா அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பார்சன்ஸ் வேலி அணையில் முழுக் கொள்ளளவான 58 அடியில் தற்போது நீர்மட்டம் 32 அடியாகவும், ரேலியா அணையின் கொள்ளளவான 43.6 அடியில் நீர்மட்டம் 16.3 அடியாகவும் உயர்ந்துள்ளது. இதனால், உதகை மற்றும் குன்னூர் மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தியாகும்.
மழை காரணமாக சுற்றுலாத் தலங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல், அவை வெறிச்சோடின. உதகை படகு இல்லம் மற்றும் பைக்காரா படகு இல்லத்தில் படகு சவாரிகள் ரத்து செய்யப்பட்டன.
சுற்றுலாப்பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் பைக்காரா படகு இல்லம்
வெள்ளக்காடாக மாறி வரும் நீலகிரி
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பெரிய அளவில் சேதங்கள் இல்லை என்றாலும், ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து, மின் தடை ஏற்பட்டது. அதை மின் வாரியத்தினர் சீரமைத்தனர். கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன மழை தொடர்வதால் பல குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கூடலூர் அருகேயுள்ள கோத்தர்வயல், இருவயல், மொளப்பள்ளி பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழையளவு (மி.மீ.,)
காலை நிலவரப்படி உதகை 37.3, நடுவட்டம் 181, கல்லட்டி 29, கிளன்மார்கன் 149, குந்தா 78, அவலாஞ்சி 820, அப்பர் பவானி 300 எமரால்டு 181, கெத்தை 14, கிண்ணக்கொரை 7, குன்னூர் 12, பர்லியாறு 9, கேத்தி 14, கோத்தகிரி 5, கோடநாடு 17, கூடலூர் 241, தேவாலா 210 மி.மீட்டர் மழை பதிவானது.
நீலகிரி மாவட்டத்தில் வட கிழக்குப் பருவ மழை மற்றும் கோடை மழை பொய்த்ததாலும், கோடை காலத்தில் மின் உற்பத்திக்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், மாவட்டத்தில் மின் உற்பத்திக்குப் பயன்படும் அணைகளின் நீர்மட்டம் கடுமையாக சரிந்தது. அணைகளில் 30-40 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு இருந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக பெய்து வரும் கன மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
குறிப்பாக அவலாஞ்சி மற்றும் அப்பர் பவானி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டுவதால், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.\
ஆர்.டி.சிவசங்கர்