ஆர்.கிருஷ்ணகுமார்
பெட்ரோலியம், நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்களின் இருப்பு குறைந்துகொண்டே செல்கிறது. மேலும், இவற்றின் பயன்பாடுகள் புவி வெப்பமயமாதலை அதிகரித்து, சுற்றுச்சூழலை பாதிக்கின்றன. எனவே, மாசில்லா மின்சாரத்தை வழங்கும் காற்றாலைகள், சூரிய ஒளி மின் தகடுகள் ஆகியவையே எதிர்காலத்தில் மின் ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்யும். இந்த சூழலில், சூரிய ஒளி மின் உற்பத்தியை ஊக்குவிப்பதே, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய, நிரந்தரத் தீர்வாக அமையும். தமிழக அரசு இதை உணர்ந்து, சூரிய ஒளி மின் சாதனங்கள் தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும்” என்கின்றனர் சூரிய ஒளி மின் சாதனங்கள் தயாரிப்பாளர்கள்.
தொழிற்புரட்சி காரணமாகவும், வாகனங்களின் பெருக்கம் காரணமாகவும் நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவின் அந்நியச் செலாவணியில் ஏறத்தாழ 70 சதவீதத்தை பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதிலே செலவிடுகிறோம்.
அதுமட்டுமல்ல, பெட்ரோலியம், நிலக்கரி பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு கடுமையாக உள்ளது. இதற்கெல்லாம் தீர்வாக, மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இவற்றில் காற்றாலை, சூரிய ஒளி ஆற்றல் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனினும், சூரிய ஒளி ஆற்றல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பதில் உள்ள சிரமங்களால், இவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பதில் ஆரம்பத்தில் தயக்கங்கள் இருந்தன. எனினும், தற்போதைய நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி இந்த தடைகளை அகற்ற உதவுகிறது. அரசும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு, சூரிய ஒளி மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க உதவ வேண்டும் என்கின்றனர் தமிழ்நாடு சூரிய ஒளி சாதனங்கள் தயாரிப்பாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் முனைவர் சி.பழனியப்பன் மற்றும் ஆலோசகர் ஏ.டி.திருமூர்த்தி. அவர்களிடம் பேசினோம்.
“பல கோடி ஆண்டுகளாக பூமிக்கடியில் உருவான நிலக்கரி, கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை, கடந்த 200 ஆண்டுகளில் 90 சதவீதத்துக்குமேலே பயன்படுத்திவிட்டோம். எதிர்கால சந்ததிகளுக்கு இவை கிடைப்பது சந்தேகமே? அதேபோல, இவற்றின் பயன்பாட்டால் பசுமை வாயுக்கள் அதிகரித்து, வளிமண்டலத்தை சேதப்படுத்தியுள்ளன. இதனால் புவி வெப்பமயமாதல் அதிகரித்து, பேரழிவுகள், இயற்கைச் சீற்றங்கள், வறட்சி, வெள்ளம் என பல பாதிப்புகளை எதிர்கொள்கிறோம்.
எனவேதான், மரபுசாரா எரிசக்தி பயன்பாடு காலத்தின் கட்டாயமாகியுள்ளது. குறிப்பாக, சூரிய ஒளி மின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஓராண்டில் 300 நாட்களுக்கு மேல் சூரிய ஒளி கிடைப்பதால், இதன் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். இரவு நேரத்தில், மழை பெய்யும் சமயத்தில் இந்த ஆற்றல் கிடைக்காது. எனவே, கிடைக்கும்போது சேமித்து வைக்க வேண்டியது அவசியம்.தற்போதைய தொழில்நுட்பம் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகொடுத்துள்ளது. பல நாடுகளில் கடலில் மிகப் பெரிய அளவில் சோலார் பேனல்கள் அமைத்து, சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர். அதிக அளவில் சூரிய வெப்பக் கருவிகளை பயன்படுத்தும்போது விலை குறையும். மேலும், பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதியை வெகுவாகக் குறைக்கலாம். அதேபோல, விறகு, நிலக்கரி உபயோகத்தைக் குறைத்து, வனத்தையும் பாதுகாக்கலாம்.
தமிழ்நாடு சூரிய ஒளி சாதனங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் 250-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தாலும், 100-க்கும் மேற்பட்டோர் முழு அளவில் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். பொதுவாகவே, சூரிய ஒளி சாதனங்கள் உற்பத்தித் தொழில் அரசை நம்பியுள்ளது. அதேசமயம், அரசின் கொள்கைகளில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், பல்வேறு மாறுபட்ட உத்தரவுகளால் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. நஷ்டமேற்பட்டு, தொழிலைத் தொடர முடியாத நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.
சூரிய ஒளி மின் சாதனங்கள் தயாரிக்க இப்போதெல்லாம் மானியங்கள் வழங்கப்படுவதில்லை. அப்படியே மானியங்கள் அறிவித்தாலும், அவற்றைப் பெறுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. வெளிப்பார்வைக்கு சூரிய ஒளி மின் சக்தி உற்பத்தியை ஊக்குவிப்பதுபோல தெரிந்தாலும், உண்மையில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.
முன்பெல்லாம் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து, தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்துவதில் தடைகள் எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால், படிப்படியாக பல்வேறு தடைகளை விதித்துள்ளனர்.
முன்பு தொழில் நிறுவனங்களில் பகல் நேரத்தில் சோலார் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தவும், இரவில் அரசு விநியோகிக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது. 2017-ல் திடீரென ஒரு நாள் சோலார் மின் உற்பத்திக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஏறத்தாழ 3,000, 4,000 கிலோவாட் திறன் மற்றும் தனி மின் ஃபீடர் கொண்ட தொழிற்சாலைகளில் மட்டும் சோலார் மின்சாரம் தயாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளில் சோலார் மின்சாரம் தயாரிக்க இயலவில்லை. 300, 400, 500 கிலோவாட் சோலார் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டிருந்த நிறுவனங்கள், சோலார் மின் உற்பத்தியையே நிறுத்த வேண்டியதாகிவிட்டது. தமிழகத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இது தொடர்பாக தமிழக அரசிடம் பலமுறை முறையிட்டும், எவ்விதப் பயனுமில்லை.
அதேபோல, நெட் மீட்டர் பயன்பாட்டிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் நெட் மீட்டர் பயன்பாட்டில் எவ்வித தடையும் கிடையாது. ஆனால், தமிழகத்தில் மட்டும் சோலார் மின்சாரத்தை உற்பத்தி செய்து, பயன்படுத்துவதில் பல தடைகள் உள்ளன.
சோலார் போன்ற மரபுசாரா மின் உற்பத்தியை ஊக்குவிக்கும்போது, தமிழ்நாடு மின் வாரியத்துக்கான முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்று கருதுகிறார்கள். இது சரியான அணுகுமுறை அல்ல. உண்மையில், இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மரபுசாரா எரிசக்தி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம்தான் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும். இந்த உண்மையை, தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக மின் வாரியம் புரிந்துகொள்ள வேண்டும். காலத்தின் கட்டாயத்தைப் புரிந்துகொண்டு, சூரிய ஒளி மின் உற்பத்திக்கு கைகொடுக்க வேண்டும்.
இன்னும் பழைய முறைகளையே கடைப்பிடித்துக் கொண்டிருக்காமல், அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும். சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் உள்ளிட்டவற்றை முழு அளவில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். சூரிய ஒளி சாதனங்கள் தயாரிக்கவும், பயன்படுத்தவும் மானியம் வழங்க வேண்டும். நிலுவைத் தொகைகளை விரைவில் வழங்க வேண்டும்.
வீடுகள், சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்து, பயன்படுத்த உதவ வேண்டும். தடைகளை அகற்றி, பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.
பொதுவாக, மின்சாரத்தை வயர்கள் வழியே கொண்டுசெல்லும்போது, ஏறத்தாழ 20 சதவீதம் வீணாகிறது. இதனால்தான் மின் வாரியத்துக்கு அதிக அளவில் இழப்பீடு உண்டாகிறது. உலக அளவில் 5 சதவீதம் மின்சாரம் மட்டுமே இழப்பீடு உள்ளது. நவீனத் தொழில்நுட்ப முறைகள் மூலம் மின்சாரம் வீணாவதைக் குறைத்தாலே, நஷ்டத்திலிருந்து மீள முடியும். ஒரு சதவீத மின்சாரத்தை சேமிக்கும்போது, ரூ.5 ஆயிரம் கோடி மீதமாகும். இவ்வாறு பல்லாயிரம் கோடி ரூபாயை மீதப்படுத்தலாம். மேலும், மின் வாரியத்தில் தொழிலாளர் திறனை அதிகரிக்க வேண்டும். நவீனத் தொழில்நுட்பங்களை முழுமையாகக் கையாளும் அளவுக்கு, தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த வேண்டும்.
தமிழக அரசு ஒத்துழைக்க மறுப்பதாலேயே, புதிய தொழில் முனைவோர் சூரிய ஒளி மின் ஆற்றல் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் கவனம் செலுத்துவதில்லை. எனவே, தடைகளை நீக்கி, புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்க வேண்டும். இது தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கும்” என்றனர்.