சென்னை
சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், உள்ளூரிலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.28 ஆயிரத்து 376-க்கு விற்கப்பட்டது.
சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.28,376-க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,547-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3,473-க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்க விலையால், நகை வாங்க மக்கள் மத்தியில் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நகை விற்பனை 35 சதவீதம் வரை குறைந்துள்ளது.
மேலும் உயர வாய்ப்பு
இதுதொடர்பாக சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்த குமார் கூறியதாவது: அமெரிக்கா வில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு டாலர் மதிப்பு குறைந் துள்ளது. இங்கிலாந்து நாட்டின் பவுன்ட் மதிப்பும் சற்று குறைந்துள்ளது. எனவே, சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்ததோடு, உள்நாட்டிலும் விலை உயர்ந்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே, தங்கம் விலையைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு புதியதாகக் கொண்டு வந்துள்ள தங்கம் மீதான கூடுதல் இறக்குமதி வரியை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.