முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை 
தமிழகம்

முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை: மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்

செய்திப்பிரிவு

சென்னை

முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைத்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று காலை திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்

இந்நிலையில், மாலை 5 மணியளவில் முரசொலி அலுவலகத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, திமுக தலைவர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், கருணாநிதியின் குடும்பத்தினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா காஷ்மீர் பிரச்சினையில் வீட்டுக் காவலில் இருப்பதால் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. மம்தா பானர்ஜி, கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார். அமர்ந்த நிலையில், கருணாநிதி எழுதுவது போன்று அச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி எழுதிய 'செம்மொழியான தமிழ் மொழியாம்' பாடல் இசையுடன் சிலை திறக்கப்பட்டது.

கருணாநிதி சிலையை திறந்துவைக்கும் மம்தா பானர்ஜி

இதையடுத்து, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மம்தா பானர்ஜி, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்கிறார்.

SCROLL FOR NEXT