தமிழகம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு; சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

அசோக்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பாநதி அணைப் பகுதியில் 64 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:

அடவிநயினார் கோவில் அணை- 50, செங்கோட்டை- 42, தென்காசி- 38, பாபநாசம்- 27, சேர்வலாறு- 22, குண்டாறு அணை- 21, கொடுமுடியாறு அணை- 15, ஆய்க்குடி- 14.20, கடனாநதி அணை- 6, அம்பாசமுத்திரம், சிவகிரியில் தலா 4, மணிமுத்தாறு- 4.80, சங்கரன்கோவில்- 3, சேரன்மகாதேவி- 1 மில்லிமீட்டர் என்ற அளவில் மழை பெய்தது.

தொடர் மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கொடுமுடியாறு, அடவிநயினார்கோவில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1330 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 355 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்து 65.90 அடியாக இருந்தது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் மூன்றரை அடி உயர்ந்து 80.64 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 64 கனஅடி நீர் வந்தது. அணை நீர்மட்டம் 50.20 அடியாக இருந்தது. கடனாநதி அணை நீர்மட்டம் 46.60 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 60.25 அடியாகவும் இருந்தது.

கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 176 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த அணையின் நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 40.03 அடியாக இருந்தது. அடவிநயினார் கோவில் அணைக்கு விநாடிக்கு 152 கனஅடி தண்ணீர் வந்தது. நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 79 அடியாக இருந்தது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 29 அடியாக இருந்தது.

வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 2.75 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 9.44 அடியாகவும் இருந்தது.

குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மழையால் அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

SCROLL FOR NEXT