கோவை
கோவை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. சிறுவாணி, வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, பேரூர், காளம்பாளையம் பகுதியில் உள்ள குனியமுத்தூர் பிரதான வாய்க்காலில் நேற்றுமுன்தினம் உடைப்பு ஏற்பட்டது. இதனால், சொட்டையாண்டி குட்டை, கங்க நாராயண சமுத்திரம், பேரூர் பெரியகுளம், குனியமுத்தூர் செங்குளம் ஆகிய 4 குளங்களுக்கு செல்லவேண்டிய தண்ணீர் நொய்யல் ஆற்றுக்கே திரும்பிச் சென்றது. உடைப்பை சரிசெய்யும் பணியில் நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பொதுப்பணித்துறையினர் கூறும்போது, “பொதுப்பணித்துறை பணியாளர்கள் 30 பேர் இரவு முழுவதும் பணியாற்றி மணல் மூட்டைகளை அடுக்கி அதிகாலை 4 மணிக்கு அடைப்பை முழுவதுமாக சரிசெய்தனர். தற்போது 4 குளங்களுக்கும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது” என்றனர்.
நேற்று சிறுவாணி அணையில் 103 மில்லி மீட்டர் அளவுக்கும், அணையின் அடிவார பகுதிகளில் 28 மில்லி மீட்டர் அளவுக்கும் மழை பெய்தது. சிறுவாணி அணையில் 25.19 அடிக்கு நீர்மட்டம் உள்ளது.