சென்னை,
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி திமுகவினர் இன்று அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதி ஊர்வலம் சென்றனர்.
திமுக தலைவரும், தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவருமான கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி, சிலை திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 8 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. பேரணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூத்த தலைவர் துரைமுருகன், ஆர்எஸ்.பாரதி. திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியில் ஆயிரக்கணக்கிலான திமுக தொண்டர்கள் பங்கேற்றனர். அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக பேரணி மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முடிந்தது.
அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மற்ற தலைவர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின் இன்று மாலை 5 மணிக்கு முரசொலி நாளேடு அலுவலகத்தில் கருணாநிதியின் சிலை திறக்கப்படுகிறது. இந்த சிலை திறப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிலை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது. பொதுக்கூட்டத்தின் நிறைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுவார்.