செயற்கை வண்ணங்களில் தயாரிக்கப்படும் உணவுப் பலகாரங்களை வாங்கி சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு மூளைபாதிப்பும், பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பும், மரபணுமாற்றங்களும் ஏற்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இனிப்பு மற்றும் கார வகைகள் உணவுப் பாதுகாப்புத் தரங்கள் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் சட்டத்தின்படி சுகாதாரணமான முறையில் தயார் செய்து விற்பனை செய்ய வேண்டும். தயார் செய்யப்படும் இனிப்பு வகை பண்டங்களில் ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கவேண்டும். அனுமதிக்கப்பட்ட செயற்கை வண்ணங்கள் (கலர் பொடி) மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும்.
காரவகை உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளதால், எக்காரணத்தைக் கொண்டும் அவற்றை பயன்படுத்தக்கூடாது. இப்படிப் பல கட்டுப்பாடுகள் இருந்தும், ஹோட்டல்கள், பேக்கிரிகள், பேருந்து நிலையக் கடைகள், தெருவோரக் கடைகளில் பொதுமக்களையும், குழந்தைகளையும் ஈர்க்கும் வகையில் கண்ணைப் பறிக்கும் செயற்கை வண்ணங்களில் காரம் மற்றும் இனிப்புப் பலகாரங்களை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
மதுரையில் செயற்கை வண்ணங்களில் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் விற்பனை அதிகமாக உள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டர் சோமசுந்தரம் தலைமையில் அதிகாரிகள், கடந்த சில நாட்களாக ஹோட்டல்கள், பேக்கரிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு செயற்கை வண்ண உணவுப் பலகாரங்களை பறிமுதல் செய்து வியாபாரிகளை எச்சரித்து வருகின்றனர்.
செயற்கை வண்ண பயன்பாடு குறித்து டாக்டர் சோமசுந்தரம் கூறுகையில், "6 வகை செயற்கை வண்ணங்களில் உணவுப் பலகாரங்களைத் தயாரித்து வியாபாரிகள் கட்டுப்பாடுகளை மீறி விற்பனை செய்கின்றனர்.
பச்சை வண்ணத்தில் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்களை சாப்பிட்டால் இரைப்பை புற்றுநோய், மரபணு மாற்றம் ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை ஏற்படும்.
சிவப்பு வண்ணப் பலகாரங்களை சாப்பிட்டால் மூளை பாதிப்பு, தைராய்டு பிரச்சனை ஏற்படும். மஞ்சள் வண்ணப் பலகாரங்களை சாப்பிட்டால் குழந்தைகளுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு கவனச்சிதைவு நோய் ஏற்படும்.
இதுபோல் ஒவ்வோர் வண்ணமும் ஏதாவது உடல் ஆரோக்கிய பாதிப்பையும், நோய்களையும் ஏற்படுத்தும்.
செயற்கை வண்ண உணவுப் பலகாரங்களை விற்பனை செய்தால் 6 மாதம் வரை சிறைதண்டனை விதிக்க உணவு பாதுகாப்பு சட்டத்தில் இடமுண்டு" என்றார்.