வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக துறைமுகங்களில் இன்று (செவ்வாய்கிழமை) ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடமேற்கு வங்கக் கடலில் மேற்குவங்க மாநிலத்தின் டிக்ஹாவிற்கு 130 கி.மீ தொலைவிலும், ஒடிசா மாநிலம் பாலாசோருக்கு 160 கி.மீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இந்த புயல் சின்னம் அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ஒடிசாவை ஓட்டியுள்ள பகுதியில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தைத் தொடர்ந்து, மீனவர்கள் வங்கக்கடலில் ஆழ்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பவும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.
இதனால் ராமநாதபுரம், பாம்பன், மண்டபம் மீன்பிடி துறைமுகத்தின் ஆழமற்ற பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்கிழமை) பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டிணம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
எஸ். முஹம்மது ராஃபி