ராமேசுவரம்,
பாம்பன் மீன் சந்தைக்கு 12 அடி நீளமுள்ள விலாங்கு மீன் இன்று விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. பார்க்க பாம்பு போன்று நீளமாக அம்மீன் காணப்பட்டதால், மீன் சந்தைக்கு வந்திருந்த பொதுமக்கள் வியப்பின் உச்சிக்குச் சென்றனர்.
இந்தியாவின் மிக நீண்ட கடற்கரை மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டம் மீன் பிடிப்பதற்கும், கடல்சார் தொழிலுக்கும் பெயர் பெற்றது. மேலும் தமிழக அளவில் மீன் உற்பத்தியில் முதலிடத்திலும் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாம்பனில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் பிடிக்கப்படும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட மீன்கள் பதப்படுத்தப்பட்டு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் திங்கட்கிழமை இரவு மீனவர்கள் விரித்த வலையில் 12 அடி நீளம் கொண்ட 30 கிலா எடைகொண்ட விலாங்கு மீன் ஒன்று சிக்கியிருந்தது. இந்த விலாங்கு மீனை இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் பாம்பன் மீன் சந்தைக்கு மீனவர்கள் கொண்டு வந்தனர். மலைப் பாம்பு போன்று நீளமான மீனாக விலாங்கு இருந்ததால் பொதுமக்கள் பயத்தில் பின்வாங்கினர். பின்னர் மீன் விற்பனையாளர், இது பாம்பு போன்று நீளமான விலாங்கு வகையைச் சேர்ந்த கடல் மீன் என்றார்.
விலாங்கு மீன்கள் குறித்து மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சித்துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ''ஆங்குயில் பார்ம்ஸ் (Anguilliformes) என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட கடலிலும், நன்னீரிலும் வாழக்கூடிய விலாங்கு மீன்கள் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பார்ப்பதற்கு பாம்பைப் போலவே தோற்றமளிக்கும் கடல் விலாங்கு மீன்கள் நன்னீர் குளங்களில் வாழும் விலாங்கு மீன்களைப் போலவே தோற்றமளிக்கின்றன. ஆனால், கடலில் வாழும் சுமார் 5 செ.மீ. முதல் 4 மீட்டர் வரை நீண்டதாகவும், அதிகபட்சமாக முரே ரக விலாங்கு மீன் அதிகபட்சமாக 150 கிலோ வரையிலும் கூட இருக்கும்.
விலாங்கு மீனின் முன் பகுதியிலும், வால் பகுதியிலும் துடுப்புகள் இருந்தாலும் அவையும் பக்கவாட்டில் ரிப்பன் போல வளைந்து உடலோடு உடலாக ஒட்டியிருக்கும். இந்தத் துடுப்புகள்தான் விலாங்கு மீன்கள் நீந்த உதவியாக உள்ளன.
விலாங்கு மீன்களுக்கு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நல்ல வரவேற்பு உண்டு. இவை இந்நாடுகளின் நட்சத்திர ஓட்டல்களில் உணவாகப் பரிமாறப்படுகிறது'' என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
- எஸ். முஹம்மது ராஃபி