தமிழகம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு காலை வெட்டி எடுக்காமல் செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை: மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறிய வகை புற்றுநோய் ஏற்பட்ட இளைஞருக்கு காலை வெட்டி எடுக்காமல் பாதிக்கபப்ட்ட எலும்பை மட்டும் அகற்றி செயற்கை மாற்று மூட்டு (Endo modular prosthesis) பொருத்தி குணப்படுத்தி உள்ளனர்.

இதனால், கடந்த 6 மாதமாக நடக்க முடியாமல் முடங்கி கிடந்த அந்த இளைஞர் தற்போது நடக்க ஆரம்பித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் நிவேந்திரன்(18). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு வலது தொடை மற்றும் முழங்காலில் கடந்த 4 மாதங்களாக வலி, வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். 

இதற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வந்தார். ஆனால், குணமடையவில்லை. கடந்த மார்ச் மாதம் 5-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனை முடநீக்கியல் துறையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர்கள் நிவேந்திரனை பரிசோதனை செய்து பார்த்தபோது அவருக்கு வலி ஏற்பட்ட வலது காலில் ‘ஆஸ்டியோசார்கோமா’ (asteosarcoma) என்ற தீவிர எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. 

இதை மருத்துவர்கள் பயாப்சி (biopsy) பரிசோதனையில் கண்டுபிடித்தனர். இந்த நோயாளிகளுக்கு முதற்கட்டமாக மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட எலும்பு பகுதியில் கீமோதெரபி (Chemotheraphy) சிகிச்சை அளித்தனர். 

அதில் நல்ல பலன் கிடைத்ததால் மருத்துவர்கள் காலை அகற்றாமல் செயற்கை மாற்றுமூட்டு பொருத்தும்  முடிவுக்கு வந்தனர். கடந்த ஜூலை 22-ம் தேதி மருத்துவக்குழு நிவேந்திரனுக்கு பாதிக்கப்பட்ட எலும்பு பகுதியை மட்டும் அகற்றி செயற்கை மூட்டு பொருத்தி குணப்படுத்தினர். தற்போது நிவேந்திரன், நடக்க ஆரம்பித்துள்ளார். 

சாதாரணமாக இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகும். ஆனால், இந்த நோயாளிக்கு பொருத்தப்பட்ட மூட்டுக்கான செலவை தமிழ்நாடு மாநில நோயாளர் நல உதவித்திட்டம் ஏற்றுக் கொண்டது. 

சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவைச் சேர்ந்த முட நீக்கியல் துறை தலைவர் பேராசிரியர் அரிவாசன், அறுவை சிகிச்சை பேராசிரியர் வி.ஆர்.கணேசன், உதவிப்பேராசிரியர்கள் பிரேம்குமார், பிரபு, கோகுல் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை பேராசிரியர் ரமேஷ், மயக்கவில்துறை நிபுணர்கள் பேராசிரியர்கள் கல்யாண சுந்தரம், செல்வக்குமார், பாப்பையா, உதவிப்பேராசிரியர் கங்கா நாகலெட்சுமி ஆகியோரை 'டீன்' வனிதா இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சந்தித்து பாராட்டினார். சிகிச்சைக்குப் பின் நோயாளி எப்படி உணர்கிறார் என்பதையும் அவரிடமே விசாரித்துக் கேட்டறிந்தார்.

SCROLL FOR NEXT