புதுச்சேரி
புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் அதிகப்படியான கமிஷன்களை தவிர்க்க வலியுறுத்தி புதுச்சேரியில் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இரண்டு நாட்கள் ஆன்லைன் ஆர்டர்களை நிறுத்தி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள சுமார் 260-க்கும் மேற்பட்ட உணவகங்களில் ஆன்லைன் மூலமாக ஸ்விக்கி, உபேர் மற்றும் ஸோமாட்டோ ஆகிய நிறுவனங்கள் உணவுப் பொருட்களை இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் புதுச்சேரியில் உள்ள உணவகங்களில் ஒப்பந்தம் செய்து உணவுகளை பெற்று விநியோகம் செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்ட உணவகங்களில் இருந்து தள்ளுபடி, சலுகைகளை அதிகமாக பெறுவதாக புதுச்சேரி ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆன்லைன் டெலிவரி கமிஷனை தவிர்க்க வலியுறுத்தி நேற்றும், இன்றும் (ஆக. 6) என 2 நாள் அடையாளமாக ஆன்லைன் ஆர்டரை நிறுத்தி வைக்கும் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
இரு நாட்களுக்கு ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்ய முடியாது என்பதால் இதனை பழகியிருக்கும் பலர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு உணவு வழங்கும் நிறுவனங்களின் கிளை கள் புதுச்சேரியில் தொடங்கப் பட்டன. இந்த நிறுவனங்கள் புதுச்சேரி யில் உள்ள ரெஸ்டா ரண்ட் மற்றும் ஓட்டல்களில் ஒப்பந்தம் செய்து கொண்டு, வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் கேட்கும் உணவுப் பொருட்களை ஆட்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றது. முதலில் தங்கள் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக குறைந்த விலைக்கு வழங்கியது. இதற்காக ரெஸ்டாரண்ட் மற்றும் ஓட்டல்களில் தள்ளுபடியும் பெற்றது.
இந்நிலையில் ஆன்லைன் நிறுவனங்கள் ரெஸ்டாரண்ட் மற்றும் ஓட்டல்களின் நிர்வாகங்கள் தங்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இதனையடுத்து புதுச்சேரி ரெஸ்டாரண்ட் உரிமை யாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு தினங்கள் ஆன்லைன் நிறுவனங்களுக்கு உணவு வழங்கக் கூடாது என்று முடிவு எடுத்தோம். அதை சங்க நிர்வாகிகள் நோட்டீஸ் மூலம் அனைத்து ரெஸ்டாரண்ட் மற்றும் ஓட்டல்களுக்கும் சென்று வழங்கினோம். நாளை முதல் (ஆக. 7) கண்டிப்பாக ஆன்லைன் நிறுவனங்களுக்கு எவ்வித தள்ளுபடியும், சலுகையும் தரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம்” என்று குறிப்பிட்டனர்.