தமிழகம்

மதுவிலக்கு பற்றி பேசுவோர், டாஸ்மாக் பணியாளர் குறித்து மவுனம் காப்பது ஏன்? - ஊழியர்கள் சங்கம் கேள்வி

செய்திப்பிரிவு

மதுவிலக்கு பற்றி பேசுபவர்கள் டாஸ்மாக் பணி யாளர்கள் குறித்து மவுனம் காப்பது ஏன் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.தனசேகர், தலைவர் நா.பெரியசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மது விலக்கு வர வேண்டும் என்பதை டாஸ்மாக் பணியாளர்கள் சங்கமும் விரும்புகிறது. இதற்காக பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் மதுவிலக்கு பற்றி பேசுவோர் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர் களுக்கு அரசின் காலி பணியிடங்களில் பணி வழங்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை குறித்து மவுனம் காப்பது ஏனென்று புரியவில்லை. அது கவலை அளிக்கிறது.

டாஸ்மாக் பணியில் 13 ஆண்டுகள்

பல்வேறு கல்வித் தகுதிகளுடன் 13 ஆண்டு காலமாக டாஸ்மாக்கில் பணியாற்றுவோருக்கு, அரசின் காலிப்பணியிடங்களில் பணி வழங்க வேண்டும் என்பதையும் மதுவிலக்கு கோருவோர் தங்களது கோரிக்கையில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT