ஓசூர் தொரப்பள்ளி ராஜாஜி நினைவு இல்லத்தில் உள்ள ராஜாஜி சிலைக்கு குமரிஅனந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
தமிழகம்

காந்தியின் 150-வது பிறந்தநாளில் நாடு முழுவதும் மதுவிலக்கு தேவை: ஓசூர் ராஜாஜி நினைவு இல்லத்தில் குமரி அனந்தன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஓசூர்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓசூரில் குமரி அனந்தன் வலியுறுத்தி உள்ளார்.

ஓசூர் ஒன்றியம் தொரப்பள்ளி கிராமத்தில் உள்ள மூதறிஞர் ராஜாஜி நினைவு இல்லத்துக்கு வந்த காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன், அங்குள்ள ராஜாஜி சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ராஜாஜி நினைவு இல்லத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாட்டில் மது பழக்கத்தினால் இளம் விதவைகள் அதிகரிப்பதுடன், இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி வருவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மது என்ற அரக்கனை நாட்டை விட்டு விரட்ட வேண்டும். இப்பணியின் முதல் கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொரப்பள்ளியில் உள்ள ராஜாஜி இல்லத்தில் இருந்து மதுவுக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளான வரும் அக்.2-ம் தேதி முதல் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார் பில் தொரப்பள்ளி ராஜாஜி நினைவு இல்லத்துக்கு வந்த குமரி அனந்த னுக்கு மாலை அணிவித்து சிறப் பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் முரளிதரன் உட்பட மாவட்ட வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT