ஸ்டாலின்: கோப்புப்படம் 
தமிழகம்

அதிமுகவை இனி அ.இ.பாஜக என அழைக்கலாம்: ஸ்டாலின் விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை

மத்திய அரசின் 370 சட்டம் ரத்து  திட்டத்தை ஆதரிப்பதால் அதிமுக என்ற பெயரை மாற்றி அகில இந்திய பாஜக  என்று இனி மாற்றிக்கொள்ளலாம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று (திங்கள்கிழமை) கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். 

இதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். அதன்படி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என அமித் ஷா அறிவித்தார். 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது குறித்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"ஜம்மு காஷ்மீர் மக்களுடைய ஒப்புதலைப் பெறாமல், சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, ஒரு ஜனநாயகப் படுகொலையை இன்றைக்கு அரங்கேற்றி இருக்கின்றார்கள். மாநில அந்தஸ்தில் இருந்து லடாக், ஜம்மு காஷ்மீர் என யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது என்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இது ஜனநாயகத்திற்கு விரோதமாக அமைந்திருக்கின்றது. இப்படிப்பட்ட ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு அதிமுகவும் துணை போயிருப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எனவே, அதிமுகவைப் பொறுத்தவரையில், அதிமுக என்ற பெயரை மாற்றி அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டால் தான் அது பொருத்தமாக இருக்கும்.

எனவே, நான் திமுக சார்பில் என்னுடைய வேண்டுகோளாக எடுத்துவைப்பது. காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அமையும் வரையில் குடியரசுத் தலைவருடைய இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

SCROLL FOR NEXT