சென்னை
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதை, ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அமையும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "காஷ்மீருக்கு, அறிஞர்களின் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின்னர் இந்திய அரசியலமைப்புச் சட்ட ரீதியாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசுத் தலைவரின் அறிவிப்பு மூலம் ரத்து செய்திருப்பதும், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என்று பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியமைத்திருப்பதும் கண்டு, இந்தியா எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்ற மனக் கவலையும், அதிர்ச்சியும் உண்டாகிறது.
நாட்டின் பாதுகாப்பிலும், இந்திய நாட்டின் இறையாண்மையிலும் திமுக என்றைக்கும் அசைக்க முடியாத அக்கறையும் நம்பிக்கையும் வைத்திருக்கிறது. அண்ணாவும், கருணாநிதியும் இதில் எந்த சந்தர்ப்பத்திலும் எவ்வித சமரசமும் செய்து கொண்டதில்லை. ஆகவேதான் சீனப் போர், பாகிஸ்தான் போர், கார்கில் போர் உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்புக்கு சவால்கள் வந்த போதெல்லாம் திமுக, மத்தியில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் கட்சியா, பாஜகவா என்றெல்லாம் பாராமல் தேசப்பற்றின் பக்கம் தீர்மானமாக நின்று அனைத்து நடவடிக்கைகளிலும் முழு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது.
அப்படிப்பட்ட திமுக அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்படுவதை, தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்து வந்துள்ளது. இன்றைக்கு நாடு பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் குன்றி வருகின்றன. பொருளாதார வளர்ச்சி பின்னோக்கி படு வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
அவற்றில் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பொறுப்புள்ள மத்திய பாஜக அரசு இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களுக்குள் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருப்பது- அதுவும் அம்மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத நிலையில் இந்த முடிவை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகவே இந்த முடிவு பார்க்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரையும், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவும் முடியாது. மக்களின் உணர்வுகளை ஒரு முதல்வரைப் போல் மாநில ஆளுநர் நுட்பமாக உணர்ந்து கொண்டு விட்டார் என்றும் கூறிட முடியாது.
ஆகவே மத்திய பாஜக அரசின் இந்த முடிவு நாட்டின் பாதுகாப்பு என்ற முக்கிய காரணத்தை முன் வைத்து எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி நாட்டுப் பற்று கொண்ட அனைவருடைய மனதிலும் இயற்கையாக எழுகிறது. அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளைக் கூட கலந்து ஆலோசிக்காமல், அந்தக் கட்சித் தலைவர்களை எல்லாம் வீட்டுச் சிறையில் அடைத்து வைத்து, தகவல் தொடர்புகளை துண்டித்து- ஒரு நெருக்கடி நிலைமையை மாநிலத்தில் உருவாக்கி இப்படியொரு நடவடிக்கை எடுத்திருப்பது மத்திய அரசின் முடிவு உள்நோக்கம் மிகுந்தது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இன்னும் ஒரு சில மாதங்களில் அங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒரு அரசை அமைக்க இருக்கும் நேரத்தில்- அந்த மாநிலத்தையே பிரித்து மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில்- ஏன் ஆளுநர்களின் நிர்வாகத்தில் நிரந்தரமாக இருக்கும் விதத்தில் கொண்டு வந்திருப்பது, கூட்டாட்சித் தத்துவத்திற்கோ, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கோ ஆக்கப்பூர்வமான ஆரோக்கியமான விளைவுகளைத் தரும் நடவடிக்கைகள் அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய நாட்டின் பக்கம் நின்ற ஜம்மு காஷ்மீர் மக்களின் உணர்வுகளை மதிக்க மத்தியில் உள்ள பாஜக அரசு தவறி- தன் கட்சியின் கொள்கையை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்ற குரல் பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் வலிமையாக எதிரொலிக்கின்ற இந்த நேரத்தில், இருக்கின்ற மாநிலத்தையும் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிப்பது இந்திய அரசியல் சட்டம் வகுத்துக் கொடுத்த ஜனநாயகப் பாதையிலிருந்து விலகிச் செல்ல பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு துடிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
ஆகவே இந்திய ஜனநாயகத்தைக் கைவிடும் எவ்வித நடவடிக்கைகளையும் இப்படி அவசர கதியில் மத்தியில் உள்ள பாஜக அரசு எடுப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அமையும் வரை குடியரசுத் தலைவர் இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் திமுகவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்", என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.