சென்னை
அதிமுகவுடன் இணக்கமாக இருந் தால் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க முடியாது என பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் அக்கட்சியின் தமிழக தலைவர்கள் புகார் தெரிவித் துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட் டணி படுதோல்வி அடைந்தது. மத்திய பாஜக அரசின் மீதும், பிரதமர் மோடி மீதும் தமிழக மக்கள் கொண்டிருந்த வெறுப்பே தோல்விக்குக் காரணம் என்று அதிமுகவினரும், மற்ற கூட்டணி கட்சிகளும் கருதுகின்றன. அதிமுக வில் சிலர் வெளிப்படையாகவே பாஜகவால்தான் தோல்வி அடைந் தோம் என பேசி வருகின்றனர். இதனால் அதிமுக மீது தமிழக பாஜகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், வேலூர் மக் களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு பாஜகவை அழைக்காமல் முற்றி லும் அதிமுக புறக்கணித்தது, தமிழக பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமாகா, புதிய தமிழகம் கட்சிகளைக்கூட அழைத்த அதிமுக, பாஜகவை அழைக்காததால் தேர் தல் பணிகளில் இருந்து ஒதுங்கி னர். இதையடுத்து, பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலா ளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரிடம் தமிழக பாஜக தலைவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி நீடிப்பதற்கு மத்திய பாஜக அரசே காரணம். 38 மக்களவைத் தொகுதிகளில் வென்று பெரும் செல்வாக்குடன் உள்ள திமுகவால் அதிமுக அரசை வீழ்த்த முடியவில்லை. இதற்கும் பாஜக அரசே காரணம். ஆனாலும், அதிமுகவினர் பாஜகவை துளியும் மதிப்பதில்லை. மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பாஜகவும், மோடியும்தான் காரணம் என பேசி வருகின்றனர். அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே பாஜகவினரை அதிமுக மதிக்கவில்லை. பிரச்சாரத்துக்கும் அழைக்கவில்லை. அவர்களே புறக்கணிக்கும்போது நாம் ஏன் அதிமுக அரசை காப்பாற்ற வேண்டும். இது தொடர்பாக ஜே.பி.நட்டாவை சந்தித்து புகார் அளித்துள்ளோம்" என்றார்.
மற்றொரு பாஜக நிர்வாகி கூறும்போது, "அதிமுக என்றாலே மக்களுக்கு ஊழல்தான் நினைவுக்கு வருகிறது. அதிமுக வில் ஏற்பட்ட பிளவும், மாநில அரசின் மீதான மக்களின் வெறுப்பும் தான் மக்களவைத் தேர்தல் தோல்விக்கு காரணம். மத்திய பாஜக அரசு மீது வீண்பழிகளை சுமத்தியபோது அதிமுக வேடிக்கை பார்த்தது. அதற்குரிய விளக்கத்தை அளிக்கவில்லை. எனவே, இனியும் அதிமுகவுடன் இணக்கமாக இருந்தால் தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பது மிகவும் கடினம் என்பதை ஜே.பி.நட்டாவிடம் கூறிவிட்டோம்" என்றார்.
வேலூர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்துக்கு பாஜகவை அழைக்காதது அதிமுக - பாஜக இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.