விழுப்புரம்,
பாமகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் தீரன் இன்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் முன்னிலையில் பாமகவில் இணைந்தார். அவரை ராமதாஸ் வரவேற்று வாழ்த்தினார்.
பாமகவில் தலைவராக இருந்தவர் பேராசிரியர் தீரன். சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த அவர் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். தினகரனுக்கு ஆதரவாளராகச் செயல்பட்டதாகவும், தொலைக்காட்சி விவாதங்களில் தினகரன் பற்றி விமர்சிக்காமல் மென்மையான போக்கைக் கடைபிடித்து வந்ததாகவும் இதனால் அதிமுக தலைமை அதிருப்தியில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேராராசியர் தீரனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவித்தனர்.
சுமார் ஆறு மாத காலம் பேராசிரியர் தீரன் எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்து வந்தார். இந்நிலையில் பாமகவிலிருந்து வெளியேறிய பேராசிரியர் தீரன் உள்ளிட்ட பலர் விரைவில் பாமகவிற்குத் திரும்புகின்றனர் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஜூலை 27-ம் தேதி தெரிவித்தார்.
இந்த சூழலில் பேராசிரியர் தீரன் இன்று தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து பாமக நிறுவனர் ராமதாஸைச் சந்தித்தார். அவர் முன்னிலையில் தன்னை பாமகவில் இணைத்துக் கொண்டார்.
இது தொடர்பாக ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பாமக தொடங்கிய போது கட்சியின் முதல் தலைவராக இருந்தவர் தீரன். எங்களைப் பிரித்த அதே காலம் மீண்டும் ஒன்று சேர்த்துள்ளது. இனி எங்களைப் பிரிக்க முடியாது'' என்றார்.
பேராசிரியர் தீரன் கூறுகையில், ''நான் பணியாற்ற வேண்டிய இடம் பாமக தான் என்பதை உணர்ந்து கட்சியில் இணைந்துள்ளேன். அன்புமணியை முதல்வராக்குவோம் என்ற லட்சியத்துடன் என் செயல்பாடுகள் இருக்கும்'' என்றார்.