செங்கல்பட்டில் இயங்கி வரும் அரசு சிறார் சிறப்பு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த 17 சிறுவர்கள், அந்த இல்லத்திலிருந்து நேற்று தப்பியோடினர். ஆத்தூர் ரயில்நிலையம் அருகே சுற்றித் திரிந்த 2 சிறுவர்கள் பிடி பட்டனர்.
செங்கல்பட்டில் அரசு சிறார் சிறப்பு இல்லம் இயங்கி வருகிறது. இதில் பல்வேறு குற்றங்களில் தண்டனை பெற்ற 18 வயதுக்கு உட்பட்ட 27 சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
போர்வைகளை கயிறாக்கி..
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த இல்லத்தில் காவலாளி மட்டும் இருந்துள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 17 சிறுவர்கள், அறையின் காற் றோட்டத்துக்காக வைக்கப்பட் டிருந்த ஜன்னலை உடைத்து, அதன் வழியாக போர்வை களை இணைத்து கயிறாக பயன்படுத்தி நேற்று தப்பியோடியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சிறார் சிறப்பு இல்ல நிர்வாகத்தினர், சிறார்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை மீட்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் புகார் எதுவும் தெரிவிக்கப்படாததால், வழக்கு பதிவு செய்யப்படவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.
2 சிறுவர்கள் மீட்பு
சிறார் சிறப்பு இல்ல நிர்வாகத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் வாலாஜாபாத் அடுத்த ஆத்தூர் ரயில்நிலையம் அருகே சுற்றித் திரிந்த 2 சிறுவர்கள் பிடிபட்டனர்.
இந்த ஆண்டு 3-வது முறை
சில மாதங்களுக்கு முன்பு கட்டிடத்தின் ஜன்னலை உடைத்து 6 சிறுவர்கள் தப்பினர். அதன் பின்னர் காவலாளியை தாக்கி விட்டு 12 சிறுவர்கள் தப்பினர். பின்னர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 3-வது முறையாக சிறுவர்கள் தப்பியுள்ளனர்.