சென்னையில் சன்னிக்கிழமை அன்று நடைபெற்ற சிறார் வன்கொடுமைக்கு எதிரான பேரணியில் திரண்ட மாணவர்கள். படம்: சிறப்பு ஏற்பாடு 
தமிழகம்

குழந்தைகள் மீதான வன்முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி: சென்னையில் திரண்ட 8 ஆயிரம் மாணவர்கள்

செய்திப்பிரிவு

சென்னை

குழந்தைகள் மீதான வன்முறையை எதிர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னையில் இன்று நடைபெற்ற பேரணியில் நகரின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 8,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும் சிறார் நீதிக் குழுவின் தலைவருமான நீதிபதி எஸ். மணிக்குமார் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பேரணியைத் தொடங்கிவைத்து பேசிய நீதிபதி மணிக்குமார் பேசியதாவது:

''குழந்தைகள் தொடர்பான சட்ட விதிகளைத் திறம்பட அமல்படுத்துவதற்காக எனது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, காவல்துறை மற்றும் குழந்தைகள் நலக் குழுவுடன் இணைந்து பல கூட்டங்களை நடத்தியது. 

குழுவின் அறிவுறுத்தல்களின்படி, குழந்தைகளின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளிகளில் 54 சிறப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன, 

குழந்தைகள் உரிமைகள் தினத்தை அரசு கொண்டாட வேண்டும். அந்தநாளில் ஒவ்வொரு அரசு ஊழியரும் குழந்தைகளைப் பாதுகாக்கவும் குழந்தைகள் நலனை பேணிப் பாதுகாக்கவும் உறுதி மொழி எடுத்துக் கொள்ளவேண்டும்''.

இவ்வாறு நீதிபதி மணிக்குமார் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் பிரிவு காவல் துணை ஆணையர் எச்.ஜெயலட்சுமி பேசுகையில், ''நகரத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு சிறார் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன, 

இவ்வாறு பதிவுசெய்யப்படும் பல வழக்குகள் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. சென்னையில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் 300 வழக்குகள் பதிவாகியுள்ளன, 25 பாலியல் குற்றவாளிகள் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.

நிகழ்வில் பங்கபேற்ற மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில், ''சிறார் வன்கொடுமை குற்றங்களைக் குறைப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் சென்னை காவல்துறை மேற்கொண்டு வருகிறது'' என்றார்.

SCROLL FOR NEXT