திமுக ஆன்மிகப் பாதையில் செல்கிறதா என்ற கேள்விக்கு வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பதிலளித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தல், நாளை (5-ம் தேதி) நடைபெற உள்ளது. தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது.
இதைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 4), காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதரைத் தரிசித்தார் கதிர் ஆனந்த். நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அவரைத் தரிசித்த கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திமுக ஆன்மிகப் பாதையில் செல்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கதிர் ஆனந்த், ''அதுபோல எதுவும் இல்லை. நீங்கள்தான் அதற்கு, ஆபரண அலங்காரம் செய்கிறீர்கள். சாதாரணமாகத்தான் இங்கு வந்தேன். காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் இன்று நடைபெறுகிறது. அதைப் பார்க்க நானும் வந்துள்ளேன். மக்கள் கூடக் கூடிய இந்த இடத்தில் என்ன செய்கிறார்கள், எப்படி விழா நடைபெறுகிறது, இதில் ஏன் நாமும் கலந்துகொள்ளக் கூடாது என்று வந்தேன்.
இதில் திமுக ஆன்மிகப் பாதையில் செல்கிறது என்பதெல்லாம் கிடையாது. நாங்கள் ஏற்கெனவே செல்லும் பாதையில்தான் இருக்கிறோம்'' என்றார் கதிர் ஆனந்த்.