மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிக மற்றும் பாமக ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துவதற்கு குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
6-வது எம்.பி. பதவியை கைப்பற்ற திமுக, காங்கிரஸ், தேமுதிக எப்படி காய் நகர்த்துகின்றன என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.
தமிழகத்தில் 6 எம்.பி. பதவி களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் 7-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
அதிமுக சார்பில் 4 வேட் பாளர்கள், கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் சார்பில் ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண் ணிக்கை அடிப்படையில் இந்த 5 வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகிவிட்டது.
போட்டியின்றி வெற்றி?
மீதமுள்ள ஒரு இடத்துக்கு 23 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட திமுக, திருச்சி சிவாவை நிறுத்தியுள்ளது. அவருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும், புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.வும் ஆதரவு அளித்துள்ளனர்.
இப்போதுள்ள நிலவரப்படி, 6 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருப்பதால் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படக்கூடிய சூழல் உள்ளது.
ஆனால், 7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவிர, 21 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட தேமுதிக வும் போட்டியிடலாம் என எதிர்பார்க் கப்படுகிறது. அக்கட்சி சார்பில் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் வேட்பாளராக்கப்படலாம். திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேரும் பட்சத்தில் திமுக வேட்பாளர் சிவாவை வாபஸ் பெறச் செய்துவிட்டு, தேமுதிகவுக்கு திமுக ஆதரவளிக்கலாம் என்று பேசப்படுகிறது.
ஆதரவு கேட்காத திமுக
கடந்த மாநிலங்களவைத் தேர்தலின்போதும் மத்தியில் காங்கி ரஸ் கூட்டணியில் திமுக இல்லை. ஆனாலும், கனிமொழிக்காக காங்கிரஸிடம் ஆதரவு கேட்டது திமுக. அவர்களும் ஆதரவளிக்க, கனிமொழி வெற்றி பெற்றார். இம்முறை, காங்கிரஸிடம் திமுக ஆதரவு கேட்கவில்லை.
எனவே, தேமுதிக ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்த முழுவீச்சில் ஏற்பாடுகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் எம்.பி. பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவதால், அவரே வேட்பாளராக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் தரப்பில் தீவிரமாக பேச்சு நடந்து வருவதை, காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகளே ஒப்புக்கொண்டுள்ளனர்.
பாமகவிடமும் பேச்சு
அப்படி காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில் அவருக்கு தேமுதிகவின் 21 எம்.எல்.ஏ.க்களுடன், காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 26 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்கும்.
திமுகவுக்கும் 26 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே இருப்பதால் திமுக காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்படும். இதைத் தவிர்க்க, பாமக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரின் ஆதரவையும் காங்கிரஸ் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸில் இருக்கும் ராமதாஸ் உறவினர்கள் மூலம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தெரிகிறது. செவ்வாய் (இன்று) மதியத்துக்குள் பதிலளிப்பதாக பாமக தெரிவித்துள்ளதாம்.
வாசன், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் இருப்பதாகவும் ஒரு கருத்து உள்ளது. காங்கிரசுக்கு பதிலாக தேமுதிக வேட்பாளரை நிறுத்தும் எண்ணமும் பரிசீலனையில் இருக்கிறது.
மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. யார் யார் மனு தாக்கல் செய்கின்றனர் என்பதை வைத்து, 6-வது எம்.பி. பதவிக்கான வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.
இப்போதுள்ள நிலவரப்படி, 6 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருப்பதால் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படக்கூடிய சூழல் உள்ளது.