சென்னை
சென்னையில் புதிதாக 7 வழித் தடங்களில் துரித பேருந்து சேவை திட்டம் (பிஆர்டிஎஸ்) கொண்டு வர மக்கள் வரவேற்பு தெரிவித் துள்ளனர். மேலும், அதிக கட்ட ணம் வசூலிக்க கூடாது என கருத்து கேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தி யுள்ளனர்.
சென்னையில் 7 வழித்தடங் களில் மொத்தம் 113 கிமீ தூரத் துக்கு துரித பேருந்து சேவை திட்டம் (பிஆர்டிஎஸ்) செயல் படுத்தப்படவுள்ளது. கோயம்பேடு பூந்தமல்லி, கோயம்பேடு அம்பத் தூர், கோயம்பேடு மாதவரம், சைதாப்பேட்டை சிறுசேரி, சைதாப்பேட்டை மகேந்திரா சிட்டி, கோயம்பேடு சைதாப்பேட்டை, குரோம்பேட்டை - துரைப்பாக்கம் வழித்தடங்களில் துரித பேருந்து சேவை இயக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்களி டம் கருத்து கேட்பு கூட்டத்தை வெவ்வேறு இடங்களில் வரும் 8-ம் தேதி வரையில் தமிழக அரசு நடத்தவுள்ளது.
இதற்கிடையே, அரும்பாக்கம் ஜெய்நகரில் உள்ள சமூகநலக்கூடத் தில் நேற்று நடைபெற்ற முதல் கருத்து கேட்புக் கூட்டத்தில் குடி யிருப்பு சங்க நிர்வாகிகள், பொது மக்கள் உட்பட மொத்தம் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியபோது, ஐஎம்ஏசிஎஸ் (imacs) என்ற நிறுவனத்தின் போக்குவரத்து ஆலோசகர்கள் கூறியதாவது:
மாநகர பேருந்துகளுடன், தனியார் வாகனங்களும் செல்வ தால் சென்னையில் முக்கிய சாலைகளில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விரைவாகச் செல்ல வும் பேருந்துகளுக்கு என தனிப் பாதைகள் அமைத்து அதில் பேருந்துகளை இயக்கவுள்ளோம். அந்த வகையில் பிஆர்டிஎஸ் திட்டத்தை தமிழக அரசு செயல் படுத்தவுள்ளது.
முதல்கட்டமாக 7 வழித்தடங் களில் மொத்தம் 113 கிமீ தூரத் துக்கு இத்திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது. தனிப்பாதைகளில் பேருந்துகளை இயக்குவதால், போக்குவரத்து நெரிசல் குறையும். விபத்துகள் குறையும், விரைவாக பாதுகாப்பான பயணம் கிடைத் தால், மக்கள் சொந்த வாகனங் களின் பயன்பாட்டைக் குறைப் பார்கள்.
இத்திட்டத்துக்கு மெட்ரோ, மோனோ ரயில் திட்டங்களை ஒப்பிடும்போது செலவும் குறைவு. மேலும், இந்த திட்டத்துக்காக புதி தாக நிலங்களைக் கையகப்படுத்தத் தேவையில்லை. இந்த விரைவு பாதையில் ஏசி பேருந்துகளை மட்டுமே இயக்கவுள்ளோம்.
இந்தப் பாதையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே அனு மதிக்கப்படும். சுங்கச்சாவடி கட் டணம் கிடையாது. மேலும், பேருந்து கட்டணமும் அதிகமாக இருக்காது. ஒதுக்கப்படும் தனிப்பாதையில் பேருந்துகளை இயக்குவதால் தற்போதுள்ளதைக் காட்டிலும் 30 முதல் 40 சதவீதம் வரை பயண நேரத்தைக் குறைக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதன்பிறகு, பிஆர்டிஎஸ் திட்டத்தை பெரும்பாலானோர் வர வேற்றுப் பேசினர். அவர்கள் பேசியதாவது:
சாலை பாதுகாப்பு குழுமத் தின் ஒருங்கிணைப்பாளர் காசிவிஸ்வநாதன்:
பிஆர்டிஎஸ் திட்டத்தின்படி, பேருந்துகளின் வருகைக்காக ஒரு இடத்திலும், புறப்படுவதற்காக மற்றொரு புறத்திலும் பேருந்து நிறுத்தம் இருப்பதை அறிகிறேன். எனவே, இந்த நிலையை மாற்றி, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருப்பதுபோல், ஒரே இடத்தில் இருபுறமும் நிறுத்தங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பு இயக்குநர் வி.ராமாராவ்:
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள இத்திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும், ஏசி பேருந்துகள் மட்டுமே இயக்குவதால், சாதாரண மக்கள் கட்டணம் செலுத்த முடியாமல் பாதிக்கப்படுவார்கள். எனவே, ஏசி இல்லாத பேருந்துகளையும் இயக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது.
மேலும், பேருந்து நிறுத்தங்கள் அருகே வாகன நிறுத்தங்களையும் அமைத்துத் தந்தால், மக்கள் அதிக அளவில் பயணம் செய்வார்கள். இந்தத் திட்டத்தை தாம்பரம் - வேளச்சேரி - தரமணி - திருவான்மியூர் தடத்திலும் செயல்படுத்த வேண்டும்.
சமூக ஆர்வலர் வி.சுப்பிரமணி:
பிஆர்டிஎஸ் திட்டத்துக்கு ஏற்கெனவே கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பிறகு, இதற்கான பணிகள் நடக்கவில்லை. எனவே, இத்திட்டத்தை கால தாமதம் இன்றி விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண, நடுத்தர மக்களும் பயன்பெறும் வகையில் கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும்.
கூட்டத்தில் பங்கேற்ற மற் றொரு தரப்பினர் கூறும்போது, ‘‘பிஆர்டிஎஸ் திட்டம் டெல்லியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் சாதகங்கள், பாதகங்களை முழுமையாக ஆய்வு செய்து, இத்திட்டத்தை செயல் படுத்த வேண்டும். மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதைத் தவிர்க்க முடியும். பிஆர்டிஎஸ் பேருந்து நிறுத்தங்களுக்கு மக்கள் வந்து செல்லும் வகையில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்து வதிலும் கவனம் செலுத்த வேண் டும்’’ என்றனர்.