நடிகர் ஜெய்யின் 'பலூன்' திரைப்படத்தை தெலுங்கிலும், நடிகர் அதர்வாவின் '100' திரைப்படத்தை டிவி மற்றும் இணையதளங்களிலும் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அதர்வா நடித்த '100' திரைப்படத்தை தயாரித்துள்ள எம்.ஜி.ஆரா சினிமாஸ் நிறுவனம், 'பலூன்' படத்தின் வெளியீட்டு உரிமைக்காகத் தர வேண்டிய தொகையில் ஒரு கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும், அத்தொகையை தராமல் '100' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என 70 எம்எம் எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் கடந்த மே மாதம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி '100' படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்தத் தடையை நீக்கக் கோரி '100' படத் தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி ஆரா சினிமாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, பாக்கி தொகையை ஜூலை 15-ம் தேதிக்குள் கொடுத்துவிடுவதாக அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை ஏற்று, '100' படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை எனவும், ஆனால் 'பலூன்' படத்தை தெலுங்கில் வெளியிட முயற்சிப்பதால், அதை வெளியிடத் தடை விதிக்கவும், '100' படத்தை தொலைக்காட்சியிலோ, அமேசான் போன்ற இணையதளங்களிலோ வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என 70 எம்.எம். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 'பலூன்' படத்தை வெளியிட்டு கிடைக்கும் பணத்தில் தான் ஒரு கோடி ரூபாய் பாக்கியைத் தரமுடியுமென எம்.ஜி.ஆரா நிறுவனம் தெரிவித்தது. பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆரா அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்ற தவறியதால் 'பலூன்' படத்தை தெலுங்கிலும், '100' படத்தை தொலைக்காட்சி அல்லது அமேசான் போன்ற பிற தளங்களில் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
70 எம்.எம். நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ஒரு கோடி ரூபாயை செலுத்தும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.