ஆம்பூர் கலவரம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 118 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
வேலூர் மாவட்டம், கொச்சி பாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண் காணாமல் போனது தொடர்பாக ஷமீல் அகமது என்பவரை ஆம் பூர் காவல்துறையினர் விசார ணைக்கு அழைத்துச் சென்றனர். சில நாட்களுக்கு பிறகு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட ஷமீல் அகமது சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அந்தப் பகுதியில் கலவரம் மூண்டது. இது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட வர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சலீம், அக்பர் பாஷா உள்ளிட்டோர் வேலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன. இதையடுத்து 118 பேர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
நீதிபதி ஆர்.சுப்பையா இம்மனுக்களை விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர்கள் கடந்த 20 நாட்களாக சிறையில் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.10 ஆயிரத்துக்கு ஜாமீனும் அதே தொகைக்கு ஒருநபர் ஜாமீனும் ஆம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழங்கி ஜாமீன் பெறலாம். இவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரியில் தங்கியிருந்து அங்குள்ள காவல்நிலையத்தில் இரு வாரங்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி சுப்பையா உத்தரவிட்டார்.