உதகை
உதகையில் கொட்டும் மழையில் பழங்கால கார்களின் அணி வகுப்பு மற்றும் கண்காட்சி நடந்தது. இதில் மோஃபா மொபட் முதல் நடிகர்களின் பயன்படுத்திய கேரவேன் வரை, பல்வேறு வாகனங்கள் பார்வையாளர்களை அசத்தின.
நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் கோடை சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் சார்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
அரசுத் துறை சார்பில் மலர் காட்சி, ரோஜா காட்சி, பழக் காட்சி, காய்கறி காட்சி, படகு போட்டி, படகு அலங்கார போட்டி ஆகியவை நடக்கின்றன. தனியார் சார்பில் நாய்க் கண்காட்சி, குதிரைப் பந்தயம், பழங்காலக் கார்களின் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
நீலகிரி வின்டேஜ் கார்ஸ் அண்ட் கிளாசிக் கார் அசோசியேசன் சார்பில் 15-வது பழங்கால கார்கள் கண்காட்சி மற்றும் அணிவகுப்பு உதகையில் இன்று (ஆகஸ்ட் 3) நடந்தது. உதகை தமிழகம் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கார்களின் அணிவகுப்பை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகம் மாளிகையில் தொடங்கிய பழங்காலப் பாரம்பரிய கார்கள் அணிவகுப்பு, ஹில்பங்க், மைசூர் சாலை, ஆட்சியர் அலுவலக சாலை, சேரிங்கிரஸ், கமர்சியல் சாலை வழியாக ஆனந்தகிரி அரங்கை வந்தடைந்தது. அங்கு அணிவகுப்பு மற்றும் கண்காட்சி நடந்தது.
மோஃபா மொபட்
கண்காட்சியில் 1928 முதல் 1961 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட பழங்காலக் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இடம் பெற்றிருந்தன. பழமை வாய்ந்த மோரிஸ் மைனர், வில்லிஸ், ஜாக்குவார், மொ்சிடீஸ் பென்ஸ், அம்பாசிடர், பியட், ஸ்டேண்டர்டு, செவர்லெட் பிளேமூத், ஆஸ்டின், டாட்ஜ் வேன், இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப்புகள், பிரபலங்கள் வைத்திருந்த கார்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் பயன்படுத்திய கார்கள், 1930-க்கு முன் தயாரிக்கப்பட்ட பல நிறுவனங்களின் கார்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
அமெரிக்கா ஆர்வெஸ்ட் இன்டோ்நேஷனல் கம்பெனி தயாரித்திருந்த டிராக்டர் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், ஜாவா, எஸ்டி, ராயல் என்பீல்டு புல்லட், ராஜ்தூத், லேம்பிரட்டா ஸ்கூட்டர் உட்பட 30 வகையாக பழமையான இருசக்கர வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியில் இடம் பெற்ற மோஃபா மொபட் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
டாட்ஜ் பிரதரஸ் கேரவன்
பழமையான கார்களை வைத்துள்ளவர்களில் சிலர் அதனைத் தொடர்ந்து அப்படியே பராமரித்து வருகின்றனர். இதனை ஒரு பொழுதுபோக்காகச் செய்து வருகின்றனர். இம்முறை அமெரிக்காவில் இருந்து டாட்ஜ் பிரதர்ஸ் வேன் கொண்டு வரப்பட்டுள்ளது. 1930-களில் அங்கு கேரவன் வாகனங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல், மரங்களை கொண்டு செய்யப்பட்ட சக்கரங்கள் பொருத்திய கார்கள், லண்டனில் மெயில் கொண்டுச் செல்லப் பயன்படுத்தப்பட்ட ராயல் மெயில் வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி, ரஷ்யா, கொரியா, ஜப்பான் மற்றும் இந்தியன் பழங்கால வாகனங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. இதில் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர்.
கொட்டும் மழையைப் பொருட்டுபடுத்தாமல், பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் வாகனங்களைக் கண்டு ரசித்து, அவற்றின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ஆர்.டி.சிவசங்கர்