தமிழகம்

30 ஆண்டுகளாக தூர் வாரப்படாத தடுப்பணை!- காத்திருக்கும் காங்கயம் விவசாயிகள்

செய்திப்பிரிவு

பெ.ஸ்ரீனிவாசன்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருக்கும் தடுப்பணையை, உடனடியாக  தூர் வார வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர் விவசாயிகள்.

திருப்பூா் மாவட்டத்தில் பின்னலாடை தொழிலுக்கு அடுத்து விவசாயம் முக்கியத் தொழிலாகவும், பரவலாகவும் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உழைக்கும் மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனா்.

மாவட்டத்தில் மொத்த பரப்பளவான 4,72,629 ஹெக்டரில், 1,84,645 ஹெக்டரில் சாகுபடி நடைபெறுவதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், பருவ மழைப்பொழிவு சீராக இல்லாததால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாசனத்துக்கு தண்ணீரின்றி விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். சில இடங்களில் லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி  தொட்டிகளில் சேமித்து,  சொட்டு நீர்ப் பாசன முறையில் பயன்படுத்தும் நிலை உள்ளது.

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள நிலையில், வரும் மழைக் காலத்திலாவது தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு விவசாயிகள் மற்றும்  பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளை தூர் வார தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், காங்கயம் அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர் வாரப்படாமல் உள்ள தடுப்பணையை, உடனடியாக தூர் வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

காங்கயம் அருகேயுள்ள வளவாநல்லூர் கிராமத்தில், வட்டமலை ஓடையின் குறுக்கே 1965-ல் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. சுமார் 100 ஏக்கர் பரப்பில் தண்ணீர் தேங்கும் வகையில், 80 மீட்டர் நீளம், 15 அடி உயரத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. 

இதில் தண்ணீர் தேங்கினால்,  தடுப்பணையின் மேல்பகுதியில் உள்ள நிழலி, தட்டார வலசு, கருக்காபாளையம், ஆண்டிப்புதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள்,  தடுப்பணையின் கீழ்பகுதியில் உள்ள வட்டமலை, ஆறுதொழுவு என  8 கிலோமீட்டர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும்  நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயிகள் பயனடைவர்.

இதுகுறித்து வளவாநல்லூர் கிராம விவசாயிகள்  கூறும்போது, “வட்டமலை ஓடைக்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளாக பல்லடம், கேத்தனூர், செஞ்சேரிமலை பகுதிகளில் உள்ள நீர்வழித் தடங்கள் மற்றும் பி.ஏ.பி. பாசனக் கால்வாய் கசிவுநீர் ஆகியவை உள்ளன. இந்த நீர்வழித் தடங்கள் அனைத்தும் புதர் நிறைந்து  காணப்படுகின்றன. மேலும், தடுப்பணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியானது, பாதியளவுக்கு மேல் மண் நிறைந்து காணப்படுகிறது.

இதனால்,  மழைக் காலங்களில் வரும் தண்ணீர் தடுப்பணையில் தேங்குவதில்லை. தொடர்ந்து பராமரிக்காமல் விடப்பட்டதால்,  தடுப்பணையில் 10 அடி உயரம் வரை வண்டல் மண் சேர்ந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர் வாரப்படவில்லை. தடுப்பணையில் தண்ணீர் தேங்காததால் சுற்றியுள்ள கிராமங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. எனவே, தடுப்பணையை உடனடியாக தூர் வாரி,  சீரமைக்க வேண்டும்.

தடுப்பணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை, விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு  பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மண்ணை அள்ள அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக பருவமழை தொடங்கும் முன் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT