தமிழகம்

பிலிப்பைன்ஸில் நடந்த விபத்தில் சுயநினைவிழந்த மருத்துவ மாணவருக்கு சென்னையில் சிகிச்சை: முதல்வர் பழனிசாமி ரூ.9.80 லட்சம் நிதியுதவி

செய்திப்பிரிவு

சென்னை

பிலிப்பைன்ஸில் நடந்த விபத்தில் சிக்கி சுயநினைவிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவருக்கு சென்னையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை சென்னை அழைத்து வர  முதல்வர் பழனிசாமி ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கினார்.

இதுகுறித்து தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மருத்துவ மேற்படிப்புக்காக தமிழகத்தில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு  சென்ற மாணவர் பிரசாந்த், அங்கு இருசக்கர வாகன விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்தார். நினைவு திரும்பாத நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். மகனை தமிழகத்துக்கு அழைத்து வர உதவ வேண்டும் என பிரசாந்தின் தந்தை, தமிழக அரசு மற்றும் முதல்வருக்கு மனு அளித்தார்.

அதனடிப்படையில், பிரசாந்தை தமிழகத்துக்கு அழைத்துவர, அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் தொடர் முயற்சி
எடுக்கப்பட்டது. தூதரகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், மருத்துவ செலவு மற்றும் விமான பயண சீட்டுக்காக மொத்தம் ரூ.9 லட்சத்து 80 ஆயிரத்தை சிறப்பு நிதியாக முதல்வர் பழனிசாமி ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து, பிரசாந்த் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார். அவருடன் அவரது தாயாரும் சிறப்பு மருத்துவரும் வந்தனர். விமான நிலையத்தின் ஓடுதளத்துக்கே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதில் பிரசாந்தை ஏற்றி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆணையரக அதிகாரிகள் செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT