தமிழகம்

ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு காஞ்சி அத்திவரதர் தரிசனம் இன்று 3 மணி நேரம் நிறுத்தம்: மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 2-ம் நாளாக நின்ற கோலத்தில் பச்சை பட்டாடை அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று பொது தரிசன வரிசையில் 4  முதல் 5 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு அத்திவரதர் தரிசனம் இன்று 3 மணி நேரம்  நிறுத்தி வைக்கப்பட உள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியதாவது:

ஆண்டாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு கிழக்கு கோபுர வாசல் பிற்பகல் 2 மணிக்கு மூடப்படும். கோயில் வளாகத்தில் இருக்கும் பக்தர்கள் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்யலாம். 

அதன் பின்னர் 5 முதல் 8 மணி வரை தரிசனம் நிறுத்தப்படும். ஆண்டாள் திருக்கல்யான நிகழ்ச்சி முடிந்து மீண்டும் 8 மணிக்கு தரிசனம் தொடங்கும்.   

வழக்கமாக இரவு 11 மணிக்கு தரிசனம் நிறைவடையும். ஆனால், இன்று மட்டும் நள்ளிரவு 1 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

பள்ளி மாணவர்கள் அத்திவர தரை தரிசிக்க தனியாக நேரம் ஒதுக்க முடியாது. பொது தரிசனத்துக்கு வரும் பக்தர்களே அதிக அளவில் உள்ளனர். வரும் 17-ம் தேதி வரை அத்திவரதரை தரிசனத்துக்கு வைக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அன்றைய தினம் 5 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்படும். கோயிலுக்குள் இருப்பவர்கள் தரிசனம் செய்து முடித்த உடன் மேற்கு கோபுர வாசல் கதவும் மூடப்படும். வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அருகே உள்ள பள்ளிக்குசெல்லும் குழந்தைகளுக்கு தனி
யாக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் பள்ளி நேரம் காலை 8.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை என மாற்றப்பட்டது.
அத்திவரதர் சிலை எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதை சோதிக்கவில்லை. அந்தச் சிலை இன்னும் உறுதியாக உள்ளது. அது தாங்கக் கூடிய அளவுக்குதான் மாலைகள் போடப்படுகின்றன. இதுவரை 43 லட்சத்துக்கு 50 ஆயிரம் பக்தர்கள் காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

காவல் துறையின் பாதுகாப்பு பணிகள் சிறப்பாக உள்ளன. அத்திவரதர் தரிசனத்தையொட்டி வரதராஜப் பெருமாள்  கோயிலில் 7,700 காவலர்கள், ஏடிஜிபி, 2 ஐஜி, 4 டிஐஜி, 18 எஸ்பி ஆகியோர் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்றார்.

SCROLL FOR NEXT