பல்லாவரம் அருகே இருசக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதியதில் ஒரு வயது குழந்தை பலியானது. தாய் பலத்த காயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி. கணவன் மற்றொரு குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையை அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம்(36). இவரது மனைவி சிந்து(33). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இன்று காலை, ராஜா ஆதார் கார்டு வாங்குவதற்காக தனது மனைவி சிந்து மற்றும் 2 குழந்தைகளுடன் தனது ஒரு மகன் ஒரு மகள் ஆகியோரிடம் ஆதார் கார்டு சம்பந்தமாக தனது இருசக்கர வாகனத்தில் பம்மல் நகராட்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பம்மல் நெடுஞ்சாலை, சர்ச் எதிரே , பம்மல் என்ற இடத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது முன்னால் சென்ற டேங்கர் லாரியை முந்தி சென்ற போது இரண்டு குழந்தைகளில் சர்வேஸ்வரி என்ற ஒன்றேகால் வயது பெண் குழந்தை கீழே விழுந்ததில் குழந்தை லாரியின் பின்பக்க டயரில் மாட்டி சம்பவ இடத்தில் உயிரிழந்தது.
தாய் சிந்து கீழே விழுந்ததில் பின் பக்க இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ராஜாராமும் அவரது மற்றொரு மகளும் காயமின்றி தப்பித்தனர். விபத்து ஏற்பட்டதும் லாரியின் ஓட்டுனர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டார். அவரை பொதுமக்கள் தாறுமாறாக தாக்கினர். அடிதாளாமல் கீழே விழுந்த அவரை தாக்கினர். பின்னர் போலீஸார் வந்து அவரை மீட்டனர்.
காயம்பட்ட சிந்து ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் சிறுமியின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி டிரைவரான திருவண்ணாமலை, செங்கம் பகுதியைச் சேர்ந்த கோவிந்த சாமி(46)யை கைது செய்த போலீஸார், பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்து இருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.