பொருளாதார கணக்கெடுப்பைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் நமச்சிவாயம் 
தமிழகம்

புதுச்சேரியில் மொபைல் ஆப் மூலம் நடக்கும் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி

நாட்டிலேயே இரண்டாவது மாநிலமாக 7-வது பொருளாதார கணக்கெடுப்பு புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. காகித பயன்பாட்டை தவிர்த்து மொபைல் ஆப் மூலம் பதிவு இம்முறை நடக்க உள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

இந்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக வழிகாட்டுதல்படி கடந்த 1977-ம் ஆண்டு முதன் முதலாக முதலாவது பொருளாதார கணக்கெடுப்பு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.  ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இக்கணக்கெடுப்பு நடக்கிறது. இதுவரை ஆறு பொருளாதார கணக்கெடுப்புகளை நடத்தி முடித்துள்ளது. தற்போது 2019-ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு நாடு முழுவதும் 7-வது பொருளாதார கணக்கெடுக்கும் பணிக்கான அனைத்து ஆயத்தப்பணிகளும் நடந்துள்ளது.

புதுச்சேரியில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்து கூறியதாவது:

"நாட்டிலேயே முதலாவதாக 7-வது பொருளாதார கணக்கெடுப்பு கடந்த ஜூலை 29-ல் துவங்கப்பட்டது. நாட்டிலேயே இரண்டாவதாக புதுச்சேரியில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஆறாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு 2013-ம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்றது. அதன்படி புதுச்சேரியில் 59,152 நிறுவனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

இதில் 30 விழுக்காடு கிராமங்களிலும், 70 விழுக்காடு நகர்புறங்களிலும் இருப்பதாக கண்டறியப்பட்டது. இக்கணக்கெடுப்பின் மூலமே நாட்டின் பொருளாதாரம் கணிக்கப்படும். கணக்கெடுப்பின் மூலம் திட்டமிட்டு செய்தால்தான் வெல்ல முடியும்.இம்முறை இக்கணக்கெடுப்பை காகித பயன்பாட்டை தவிர்த்து மொபைல் ஆப் மூலம் நடக்கிறது" என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துறை செயலர் பத்மா ஜெய்ஸ்வால், இந்திய அரசின் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக துணை இயக்குநர் துரைராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

-செ.ஞானபிரகாஷ்

SCROLL FOR NEXT