தமிழகம்

வேலூரில் தாமதமாகத் தேர்தல் நடைபெற காரணமே திமுகதான்: தமிழிசை

செய்திப்பிரிவு

வேலூரில் தாமதமாக தேர்தல் நடப்பதற்குக் காரணமே திமுகதான் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். 

இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த், அக்கட்சி பொருளாளர் துரைமுருகன் ஆகியோர், ஆம்பூரில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டம் முடிந்த பின்பு அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது, அனுமதியின்றி கூட்டம் நடத்தப்பட்டதாக தங்களுக்கு புகார் வந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்ட தனியார் மண்டபத்திற்கு சீல் வைத்தனர். மு.க.ஸ்டாலின், கதிர் ஆனந்த், திமுக நிர்வாகிகள், மண்டப உரிமையாளர் ஜக்கரியா, சுன்னத் ஜமாத் அமைப்பின் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை, ''ஸ்டாலின் கூட்டம் நடத்திய மண்டபம் பூட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கூட்டம் நடத்துவதற்கு அதிகார பூர்வமாக அவர்கள் அனுமதி பெறவில்லை என்று தெரிய வருகிறது. 

தேர்தல் என்று வரும்போது, யாராக இருந்தாலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும். அது நடக்காதபோது வழக்கு போடப்பட்டிருக்கிறது. தேர்தல் சட்ட விதிகளை மீறுவோர் மீது தேர்தல் ஆணையம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

அதுமட்டுமல்ல முறைகேடான தேர்தல் நடப்பதற்கும், தாமதமாகத் தேர்தல் நடைபெறவும் காரணமாக இருந்தது திமுகதான்'' என்றார் தமிழிசை.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மோடி அரசின் மீது மக்கள் கோபமாக இல்லை. இவர்களாக அப்படி உருவகப்படுத்திக் கொள்கிறார்கள். 

இப்போது மக்கள் மோடி அரசுக்கு ஆதரவளிக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்த மத்திய அரசை, தற்போது பிரதமர் மோடி ராக்கெட் வேகத்தில் செலுத்துகிறார்'' என்று கூறினார் தமிழிசை.

SCROLL FOR NEXT