தமிழகம்

லாக் அப் இல்லை, ஆயுதங்கள் வைக்க இடமில்லை: தனியார் கட்டிடங்களில் இயங்கும் புதுச்சேரி காவல் நிலையங்கள்

செய்திப்பிரிவு

லாக் அப் இல்லை, ஆயுதங்கள், ஆவணங்கள் வைக்க இடமில்லை என பல குறைகளுடன் போலீஸாரே அல்லாடி வருகின்றனர். புதுச்சேரியில் சொந்தக்கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கும் முக்கிய காவல் நிலை யங்களின் நிலை இதுதான்.

புதுச்சேரியில் உள்ள 30 காவல் நிலையங்களில் 1500க்கும் மேற்பட்ட போலீஸார் பணியாற்றி வருகின்றனர். புதுச்சேரியில் முக்கிய காவல் நிலையங்கள் சில வாடகை கட்டிடங்களில்தான் இயங்குகின்றன. வாடகை கட்டி டத்தில் இயங்குவதால் போலீ ஸாரும், புகார் தரும் மக்களும் கடும் அவதிக்கு ஆளாகி வரு கின்றனர்.

இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் கூறும்போது, "புதுச்சேரி லாஸ்பேட்டையில் கடந்த 1991ம் ஆண்டு புறக்காவல் நிலையம் தொடங்கப்பட்டு பின்னர் காவல் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் போதிய வசதி இல்லை. லாஸ்பேட்டை பிரதான சாலையில் குறுகலான வாடகை கட்டிடத்தில் காவல் நிலையம் உள்ளது. இக்கட்டிடம் இதற்கு முன்பு சிமெண்ட் குடோனாக இருந்துள்ளது. கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.

புதுச்சேரி மூலக்குளத்தில் கடந்த 1968ல் ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் தொடங்கப்பட்டது. இக்கட்டிடம் சேதமடைந்ததால் இடிக்கப்பட்டு அதே பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்துக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாறியது. இதுநாள் வரை வாடகை கட்டிடத்தில்தான் காவல் நிலையம் இயங்கி வருகிறது. காவல் நிலையத்துக்குரிய போதிய வசதிகள் இங்கு கிடையாது.

இதேநிலையில்தான் கரிக்கலாம் பாக்கம் காவல்நிலையமும் உள்ளது. கடந்த 1996ல் இருந்து வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் காவல் நிலையத்தில் அடிப் படை வசதியில்லை. இதுதவிர வில்லியனூர் போக்குவரத்து காவல் நிலையம், மகளிர் காவல் நிலையங்கள் போதிய இடவசதி இல்லாமல் உள்ளன. அதேபோல் ரெட்டியார்பாளையம் ஜெயா நகரில் வாடகை வீட்டில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் நிலையம் இயங்குகிறது. இதேபோல் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் நிலையம் முத்தியால்பேட்டையில் தனியார் கட்டிடத்தில் இயங்குகிறது.

காவல் நிலையங்கள் தனியார் கட்டிடங்களில் இயங்குவதால் லாக் அப் வசதி இல்லை. ஆவணங்கள் வைக்க தனி அறையும், பெண்களை விசாரிக்க தனி அறையும் இல்லாத நிலையே உள்ளது. கைதிகளை பாதுகாப்புடன் வைப்பதிலும் சிக்கல் உள்ளது. மேலும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாக்க போதிய அறைகள் இல்லை. கழிவறை வசதியும் இல்லாமல் தான் உள்ளது. இதனால் சொந்த கட்டிடம்தான் தேவை என்றனர்.

அரசு தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் அனைத்து காவல் நிலையங்களும் சொந்த கட்டிடங்களில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக இடம் ஒதுக்கப்பட்டு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் நிறைவடையாமல் உள்ளன" என்று குறிப்பிடுகின்றனர்.

SCROLL FOR NEXT