தமிழகம்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்குப் பின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்: தவறான சிகிச்சையே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

திருவாரூர்

குடவாசல் அரசு மருத்துவமனை யில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண், மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். தவறான சிகிச்சையே உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறி அப்பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருக்களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன்(35). இவரது மனைவி பவிதா(30). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 24-ம் தேதி பவிதாவுக்கு குடவாசல் அரசு மருத்துவமனையில், 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது, ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால், அன்றைய தினமே மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பவிதா அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் உயிரிழந்தார். இதையறிந்த மகாதேவன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியபோது, “நேற்று(நேற்று முன்தினம்) காலை நல்ல நிலையில் பவிதா பேசிக்கொண்டிருந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச் செல்லலாம் என தெரிவித்தனர். அதன்பின்னர் வீட்டுக்குப் புறப்படும் முன்னர், பணியிலிருந்த மருத்துவர்கள், பவிதாவுக்கு ஊசி போட்டனர். அந்த ஊசி போடப்பட்ட சிறிது நேரத்திலேயே உடல் நலிவுற்ற பவிதா, தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். எனவே, தவறான சிகிச்சையால்தான் பவிதா உயிரிழந்துள்ளார்” என்றனர்.

இதுகுறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஜய குமார் கூறியபோது, “பவிதாவுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப் பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில், பவிதாவைப் பரிசோதனை செய்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டுள்ளோம்” என்றார்.

தொடர்ந்து, மருத்துவமனை முன்பு உறவினர்கள் திரண்டு, மருத்துவர்களிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸார், இருதரப்பினரையும் அழைத்துப் பேசி சமாதானப் படுத்தினர்.

SCROLL FOR NEXT