புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் உள்ள வங்கியில் 19 கிலோ தங்க நகைகளைத் திருடியதாக கைது செய்யப்பட்ட வர், சென்னையிலும் 3 கிலோ நகைகளைத் திருடியது விசா ரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து மேலும் 1 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
குளத்தூரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் 2014 நவம்பர் 30-ம் தேதி இரவு 19 கிலோ நகைகள் திருடப்பட்ட வழக்கில், ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மு.கோபாலகிருஷ்ணன், அவரது சகோதரர் அழகிரிசாமி, நகை விற்பனையாளர் திருக்கோகர்ணம் ஆனந்தகுமார் ஆகியோரை கீரனூர் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து முதலில் 5 கிலோ தங்கம் மற்றும் ரூ.1.5 கோடி ரொக்கத்தையும், பின்னர் 100 பவுன் நகைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், சென்னை செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2013-ல் நகைக் கடையில் சுமார் 3 கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட விதமும், குளத்தூர் வங்கியில் திருடப்பட்ட விதமும் ஒரே மாதிரியாக இருந்ததால், செம்பியம் திருட்டிலும் கோபாலகிருஷ்ணனுக்குத் தொடர்பிருக்கலாம் என்று போலீஸார் கருதினர்.
இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோபாலகிருஷ்ணனை நீதிமன்ற உத்தரவு மூலம் கடந்த 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை செம்பியம் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், செம்பியம் நகைக் கடையில் கோபாலகிருஷ்ணன் திருடியது உறுதியானது.
பின்னர், கீரனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில், கோபாலகிருஷ்ணன் பெயரில் நகை அடகு வைக்கப்பட்டுள்ளதா என்று போலீஸார் விசாரித்தனர். இதன் அடிப்படையில், சுமார் 1 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோபாலகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நகைகளைப் பறிமுதல் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.