ஆம்பூர்
அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என ஆம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, ஆம்பூர் புறவழிச்சாலையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் தொகுதி மக்களுக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆனவர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆருடன் இணைந்து பணியாற்றியவர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவரை, சென்னை மாவட்டச் செய லாளராக அப்போதே எம்ஜிஆர் நியமித்தார் என்றால், அவரது திறமையை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு இன்று மக்க ளுக்கான நல்லாட்சியை வழங்கி வருகிறது. முத்தான திட்டங்களை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வழங்கியுள்ளனர். அதிமுகவை மாபெரும் இயக்கமாக மாற்ற ஜெயலலிதா பட்ட இன்னல்கள் ஏராளம். இஸ்லாமிய பெரு மக்களுக்கு அதிமுக அரசு நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அதிமுக ஆட்சியில் நல்ல திட்டங்கள் வந்ததா? திமுக ஆட்சியில் நல்ல திட்டங்கள் வந்ததா என்பதை மக்கள் சிந்தித் துப் பார்க்க வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு
திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டது, கடுமையான மின் வெட்டு போன்ற பிரச்சினைகள் இருந்தனவா இல்லையா? இதை எல்லாம் மறைத்து தற்போது பொய் பிரச்சாரம் செய்து வரு கின்றனர். எக்காலத்திலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது.
அவர்கள் பெற்ற வெற்றி தற்காலிகமானது. நிரந்தர வெற்றி அல்ல. அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்துத் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நல்ல திட்டங்கள் தொடர்ந்து கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.