சென்னை
கின்னஸ் சாதனைக்கான ‘நாட்டிய திருவிழா-366’ நிகழ்ச்சியின் வெள்ளி விழா நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஏஎம்என் ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் சர்வதேச கின்னஸ் சாதனைக்காக ‘நாட்டிய திருவிழா-366’ என்ற கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 366 நாட்களுக்கு பாரம்பரிய நாட்டியங்களை நடத்தும் இந்த நிகழ்வு கடந்த ஜூலை 8-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இதில் பரதநாட்டியம், குச்சிப்புடி, ஒடிசி உட்பட 8 விதமான பாரம்பரிய நடனங்கள் தினமும் நடத்தப்படுகின்றன. முதல் நாளன்று ஒருவர் மட்டும் நடனமாட, இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நாள் ஆக ஆக, நடனமாடுவோர் எண்ணிக்கையும் இரண்டு, மூன்று என அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப கடந்த 24 நாட்களாக பல்வேறு அரங்கங்களில் இந்த நடன விழா நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாதனை நிகழ்ச்சி தொடங்கியதன் 25-வது தினமான நேற்று வெள்ளி விழா நாளாக, சென்னை விவேகானந்தர் இல்லத்தில் உள்ள அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பக்தி உட்பட பல்வேறு கருத்துகளை முன்னிறுத்தி 25 பரதநாட்டியக் கலைஞர்கள் நடனமாடினர்.
இந்த விழாவில் பாடகி பி.சுசீலா, மூத்த கர்னாடக இசைக் கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணன், ஏஎம்என் ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனர் ஆர்.ஜே.ராம் நாராயணா உட்பட பலர் கலந்துகொண்டனர். நாட்டியத் திருவிழாவின் நிறைவு நாளன்று 366 கலைஞர்கள் ஒருசேர சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடனமாட இருப்பது குறிப்பிடத்தக்கது.