தமிழகம்

பாரிமுனை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து: 60 டவர்கள் பாதிப்பு

செய்திப்பிரிவு

சென்னை,

சென்னை, பாரிமுனையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 60 டவர்களின் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னை, பாரிமுனையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. முதல் தளத்தில் பரவிய நெருப்பு, மற்ற இடங்களுக்கும் பரவியது. தீவிபத்து குறித்து தகவல் அறிந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன. நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அலுவலகத்தில் உள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து சேதமானது.

இதனால் வட சென்னை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் லேண்ட்லைன் சேவைகளும் பிராட்பேண்ட் என்று அழைக்கப்படும் இணைய சேவைகளும் முடங்கியுள்ளன. இந்திய ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கி உள்ளிட்டவைகளின் தலைமை அலுவலகங்களும் பாரிமுனையில்தான் இயங்கிவருகின்றன.

தீ விபத்து காரணமாக அவற்றின் சர்வர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  பிஎஸ்என்எல் சென்னை சர்க்கிள் பொது மேலாளர் சந்தோஷ் தீ விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார். தமிழக அரசின் சர்வருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று ஆய்வு நடைபெற்று வருவதாக தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து மேலும் பேசிய அவர், ''யாரும் பயப்படவேண்டாம். சிறிது நேரம்தான் பிஎஸ்என்எல் சேவைகள் முடங்கும். அதன்பிறகு நிலைமை சீரடையும்'' என்றார்.

SCROLL FOR NEXT